109 ரேஸ் குழுக்கள்டி-.ஐ.ஜி. ஆனிவிஜயா தொடங்கி வைத்தார்

திருச்சி சரகத்துக்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து காவல்துறையினருக்கு வரும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், புகார் மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் இருசக்கர வாகனத்துடன் கூடிய ஒரு ரேஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி-30, புதுக்கோட்டை-38, கரூர்-17, பெரம்பலூர்-8, அரியலூர்- 16 என மொத்தம் 109 குழுக்கள் பயன்படுத்தப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்திற்கான 30 ரேஸ் குழுவினரின் செயல்பாட்டினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடந்தது.

திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா கலந்து கொண்டு ரேஸ்குழு செயல்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், குழந்தைகள் கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் அஜீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த ரேஸ் குழுவினர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் வாக்கி-டாக்கியுடன் ரோந்து பணியில் இருப்பார்கள்.

இந்த குழுவில் உள்ளவர்கள், திருச்சி சரக டி.ஐ.ஜி. மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு வரும் தொலைபேசி தகவல்களை பெற்று உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று முதல்கட்ட விசாரணை செய்தல், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு உடனடியாக சம்பவ இடம் சென்று விசாரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

பொதுமக்களின் குறைகள், புகார்கள், குற்ற நிகழ்வுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற புகார்களை திருச்சி சரக டி.ஐ.ஜி. அலுவலக தொலைபேசி எண் 0431-2333909, மாவட்ட காவல் அலுவலக கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் திருச்சி 0431-2333621, புதுக்கோட்டை- 94981-81223, கரூர்-94981-81222, பெரம்பலூர்- 04328-225085, அரியலூர்- 04329-221500 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி திருச்சி சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா நிருபர்களிடம் கூறுகையில், “பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்காக எங்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் வகையில் ரேஸ் குழுக்களை தொடங்கி இருக்கிறோம். பொதுமக்கள் நேரில் வந்து தான் குறைகளை தெரிவிக்க வேண்டும் என்று இல்லை. தொலைபேசி மூலம் அழைத்தவுடன் அவர்களுக்கு உதவி செய்ய முன்னால் வந்து நிற்போம். பொதுமக்களிடம் இருந்து நள்ளிரவில் கூட உதவி கேட்டு எனது செல்போனை தொடர்பு கொள்கிறார்கள். நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க சிலநிமிடங்கள் தேவைப்படுகிறது. இதனால் அவர்களுக்கு உதவி கிடைக்க தாமதம் ஆகும். ஆனால் இப்போது எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தவுடன் உடனடியாக அதை ரேஸ் குழுவுக்கு அனுப்பி விடுவேன். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி கிடைக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here