முதுபெரும் எழுத்தாளர் கோவை ஞானி மரணம்

கோவை ஞானி என்று அழைக்கப்படும் கி. பழனிச்சாமி வயது முதிர்வின் காரணமாக கோவையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை உயிரிழந்தார்.

தமிழாசிரியரான இவர், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிர தமிழிலக்கியச் சிந்தனையாளர், கோட்பாட்டாளர் மற்றும் திறனாய்வாளராக இயங்கி வந்தவர்.

கடந்த சில ஆண்டுகளாக இருதய நோய்க்காக சிகிச்சை எடுத்து வந்த இவர், சென்றவாரம் வரை இலக்கியம் குறித்து நண்பர்களிடம் உரையாற்றி இருக்கிறார்.

கோவை வட்டாரத்தில் 1935 இல் பிறந்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்ற இவர், கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றியவர்.

மார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்ட இவர், தமிழ் மரபையும், மார்சிய தத்துவத்தையும் இணைத்து தமிழ் மார்சிய தத்துவத்தை சமூகத்திற்கு தந்தவர்.

தமிழ் மரபையும் மார்க்சியத்தையும் இணைத்ததன் மூலம் தமிழ் மார்க்சியத்தை படைத்துள்ளார்.

கோவை ஞானி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளதோடு தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா-தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

“மற்றொரு ஆலமரமும் சாய்ந்தது. கோவை ஞானி மறைந்தார் என்ற துயரமான செய்தி. மார்க்சியம்- தமிழியம்- இந்திய தத்துவ மரபு ஆகிவற்றிற்கிடையே ஒரு புதிய உரையாடலுக்கு வித்திட்டவர் ஞானி.

பல வருடங்களுக்கு முன்பே பார்வையிழந்த நிலையில் பிறர் உதவியுடன் இடையறாது எழுதியும் பேசியும் ஒரு பேரியக்கமாக செயல்பட்டார்.” என மனுஷ்ய புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் செ.மோகன், “நம் காலத்தின் ஞானச் சுடர் கோவை ஞானி காலமான செய்தி பெரும் துயர் அளிக்கிறது,” என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சகாப்தத்தின் முடிவு இது என எழுத்தாளர் மற்றும் செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ் தனது அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here