வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளன – மத்திய அரசு

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, வெளிநாடுகளில் சிக்கியுள்ள 25,939 தமிழர்களை தாயகம் அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன்,வெளிநாட்டில் உள்ள தமிழர்களை மீட்டு வர ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும்; அதில் சென்னை விமான நிலையத்திற்கு 41 விமானங்களும், திருச்சிக்கு 11 விமானங்களும், கோயமுத்தூருக்கு 4 விமானங்களும், மதுரைக்கு 2 விமானங்களும் இயக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கு தொடர்ந்த பிறகே, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு அதிக விமானங்கள் இயக்கப்படுவதாகவும்; எனினும் எத்தனை விமானங்கள் மூலம் எத்தனை பேர் மீட்டு வரப்பட உள்ளனர் என்பதில் தெளிவான விளக்கம் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு 58 விமானங்கள் தான் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கின்றது, இது போதாது இன்னும் 149 விமானங்கள் இயக்கப்பட்டால் தான் சுமார் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகளை கொண்டு வர முடியும் என நீதிமன்றத்தில் வாதத்தை எடுத்து வைத்தார்

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் விமான இயக்கம் தொடர்பான விவரங்களை வரும் 30 ம் தேதி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here