வனிதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சூர்யா தேவி கைது

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. பீட்டர் பால் முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். அந்தவகையில் சூர்யா தேவி என்ற பெண் தொடர்ந்து வனிதாவின் திருமணத்தைப் பற்றியும், வனிதாவை பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு வந்தார்.

வனிதாவும் அதற்கு பதிலளிக்கும் வண்ணம் பல்வேறு கருத்துக்களை வீடியோக்களாக வெளியிட்டிருந்தார். இதனையடுத்து நடிகை வனிதா, சூர்யா தேவி மீது போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.

இதேபோல் வனிதா மீது, சூர்யா தேவியும் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான புகார்கள் அனைத்தையும் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து நடிகை வனிதாவையும், சூர்யா தேவியையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். இதுபோன்று அவதூறு செய்து வீடியோக்கள் வெளியிடக்கூடாது என இருவரையும் போலீசார் எச்சரித்தனர்.

போலீசாரின் எச்சரிக்கையை மீறி சூர்யா தேவி தொடர்ந்து நடிகை வனிதா குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மிரட்டும் வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டதால், அவரை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெண்ணை ஆபாசமாக திட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here