தள்ளாத வயதிலும் சாவிலும் இணைபிரியா தம்பதி

தஞ்சை மாவட்டம் திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுப்புராவ்(வயது 92). இவர், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஹேமா(88). இணைபிரியா தம்பதிகளான இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. தங்களுக்கு குழந்தை இல்லாததை பெரிதாக எடுத்துக்கொள்ளாத இந்த தம்பதியினர் ஒருவருக்கு ஒருவர் குழந்தையாக வாழ்ந்து வந்தனர். கடந்த 3 வருடங்களாக திருவையாறு தியாகராஜர் காலனியில் தனது உறவினர் வீட்டில் இந்த தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் ஹேமா திடீரென்று இறந்தார்.

மனைவி இறந்த தகவல் அறிந்து சுப்புராவ் மிகுந்த மனவேதனை அடைந்தார். வயதான காலத்தில் தனக்கு இருந்த ஒரே ஆதரவான மனைவி இறந்ததால் அவரது இறப்பை சுப்புராவால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மனைவி இல்லாத வாழ்க்கை அவருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. இதனால் மிகுந்த வேதனையிலும், சோகத்திலும் இருந்த சுப்புராவ் மனைவி இறந்த 1½ மணி நேரத்தில் அதாவது மாலை 6 மணியளவில் திடீரென்று இறந்தார். ஆதர்ஷ தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்கள், வாழ்வில் மட்டுமல்லாது, சாவிலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் அடுத்தடுத்து இறந்ததை அறிந்த அவர்களது உறவினர்கள் இருவர் உடல்களையும் நேற்று காலை ஒரே வண்டியில் வைத்து திருவையாறு சுடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். அங்கு இருவரது உடல்களையும் ஒரே இடத்தில் தகனம் செய்தனர். இந்த சம்பவம் திருவையாறு பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here