பேராக் சொக்சோ வேலை வாய்ப்புக் கண்காட்சி தாப்பாவில் முதல் முறையாக நடைபெற்றது

தாப்பா நகரில் மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் சொக்சோ முதல் முறையாக நடத்திய வேலை வாய்ப்புச் சந்தை வெற்றிகரமாக நேற்று நடைபெற்றது.
அடுத்தக்கட்டமாக நாடு முழுவதும் இதுபோன்ற வேலை வாய்ப்புச் சந்தைகளை சொக்சோ நடத்தும் என்று மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

மலேசியர்களுக்கு குறிப்பாக வேலை இழந்தோருக்கு புதிய வேலை வாய்ப்புகளைத் தேடித் தருவதற்கு சொக்சோ இம்முயற்சியை முன்னெடுத்துள்ளது என்று அவர் சொன்னார்.

மனித வள அமைச்சின் முயற்சியில் தம்முடைய நாடாளுமன்றத் தொகுதியான தாப்பாவில் தொடங்கியிருக்கின்றது. பல்வேறு நிலைகளில் வேலை வாய்ப்புகளை இழந்திருப்போருக்கு நல்வாழ்வு கொடுக்கும் இம்முயற்சிக்கு அமோக ஆதரவு கிட்டியிருக்கிறது என்று அவர் சொன்னார்.

இதுவரை 60,496 பேர் வேலை இழந்திருக்கின்றனர். பெரிய எண்ணிக்கையிலானோர் வேலை இழப்பர் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் இந்தக் குறைந்த எண்ணிக்கை மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

ஆண்டு இறுதிக்குள் இன்னும் எவ்வளவு பேர் வேலை இழப்பர்? அவர்களுக்கு எந்தெந்த வகையில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மனித வள அமைச்சீ எடுக்கும் என்று சரவணன் தெரிவித்தார்.

தாப்பாவில் நடைபெற்ற இந்த முதலாவது வேலைக் கண்காட்சி சொக்சோ தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் டத்தோ அஸீஸ் முகமட்டுடன் விரிவாக விவாதிக்கப்பட்டு இன்று வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது என்றும் டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

பேராக்கில் 420 நிறுவனங்கள் பெஞ்ஜானா வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பதிந்து கொண்டுள்ளனர். இதில் 147 நிறுவனங்கள் வேலைகளுக்கு ஆட்களை அமர்த்தியுள்ளன.

அதே சமயத்தில் 510 தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர். நேற்று நடைபெற்ற தொழில் வாய்ப்புக் கண்காட்சியில் 20 நிறுவனங்களில் 7,000 வேலை வாய்ப்புகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.

பேராக் மக்களுக்கு நல்வாழ்வைத் தரும் இந்த அரிய வாய்ப்பினை தொழில்நிறுவனங்கள் அமைத்துக் கொடுக்கும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மனித வள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஜமீல் ரக்கோன், தாப்பா மாவட்ட மன்றத் தலைவர் ஷாருல்அஃபெண்டி பஹாருடீன், தீபகற்ப மலேசிய மனித வள இலாகா இயக்குநர் டத்தோ முகமட் ஜெப்ரி ஜொக்கிம், சொக்சோ தொழிலாளர் காப்புறுதி திட்டப் பிரிவுத் தலைவர் டத்தோ முகமட் சஹார் டாருஸ்மான் , எச்ஆர்டிஎப் வாரியத் தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன், பேராக் மாநில சொக்சோ இயக்குநரும் பேராக் 2020 சொக்சோ வேலை வாய்ப்புக் கண் காட்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான அந்தோணி அருள்தாஸ், ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஹஜி ஷம்சீடின் அபு ஹட்சான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here