சர்வதேச விமான போக்குவரத்து முந்தைய நிலையை அடைய 4 ஆண்டுகள் தேவை

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில், வணிகம், சுற்றுலா என அனைத்து துறைகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சர்வதேச விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நாடுகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைகளால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாகவும், நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாகவும் விமான நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அவற்றில், ஊழியர்கள் பணி நீக்கம், ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுப்பு, பணி நேரத்தை அதிகரித்தல், சம்பளமற்ற பணி வழங்குதல் என பல்வேறு அதிரடி முடிவுகளும் அடங்கும்.
குறிப்பாக சர்வதேச அளவில் இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனம் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது. அதேபோல் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமாக இண்டிகோ தனது ஊழியர்களில் 10 சதவிகிதம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதேபோல் பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களில் பெருமாலானோரை பணி நீக்கம் செய்து வருகிறது.
இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைய குறைந்தது 4 ஆண்டுகள் தேவைப்படும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கு பின்பு தான் கொரோனாவுக்கு முந்தைய நிலையை சர்வதேச விமான போக்குவரத்து அடையும்.
முன்னதாக கடந்த மே மாதத்தில் சர்வதேச விமான போக்குவரத்து 91 சதவிகிதம் குறைந்திருந்தது. அவை 86.5 என்ற அளவில் ஜூன் மாதம் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனாலும் நிலைமை முழுவதும் சீரமைய குறைந்தது 4 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here