திரும்பிப் பார்க்கிறோம்

இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர்

ஐ.ஏ.எஸ். பரீட்சை எழுதி கலெக்டர் ஆகவேண்டிய ஏ.சி.திருலோகசந்தர், எதிர்பாராதவிதமாக திரைப்பட இயக்குனராகி, 65 படங்களை டைரக்ட் செய்தார். அதில் சிவாஜி நடித்த படங்கள் மட்டும் 23.

திருலோகசந்தரின் சொந்த ஊர் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு. தந்தை பெயர் ஏ.செங்கல்வராய முதலியார். சென்னையில் ஆங்கிலேய கம்பெனி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்தவர்.

ஏ.சி.திருலோகசந்தர் சென்னை புரசைவாக்கத்தில் ஈ.எல்.எம். பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார்.

இவர் ஒரு புத்தகப் புழு. கையில் ஒரு புத்தகத்துடன்தான் எப்போதும் இருப்பார். கதை விவாதத்தின் போதும், இயக்கும் போதும், பாடல் எழுதப்படுகின்ற போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்.

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா, நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், படப்பிடிப்புக்கு வந்தால், தான் உண்டு.. தன் வேலை உண்டு என்று இருப்பார். யாருடனும் பேச மாட்டார். நடிக்காத நேரத்தில் படப்பிடிப்பு அரங்கத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்.

ஆனால் ஒரு படப்பிடிப்பில் அவர் இயக்குனரிடம் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தால், அது நிச்சயமாக திருலோகசந்தரின் படப்பிடிப்பாகத்தான் இருக்கும். இருவரும் புத்தகங்களைப் பற்றித்தான் பேசுவார்கள்.

அப்போதே பள்ளியில் கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி, அதில் தனது கற்பனைத் திறமையால் உருவாக்கிய கதைகளை வெளியிடுவார். நாடகங்களையும் எழுதி சக மாணவர்களுடன் சேர்ந்து நடிப்பார்.

இதனால் திருலோகசந்தருக்குள் இருந்த எழுத்தார்வம் வளரத் தொடங்கியது. பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ‘எம்.ஏ’ முடித்தார்.

படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் பல பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதினார். அதே நேரத்தில் அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பான ஒரு நாடகத்தில் நடித்தார்.

கல்லூரியில் நடக்கும் கலை விழாக்களிலும் தனது பங்கை திறம்பட செய்வார். திருலோகசந்தரை எப்படியாவது ‘ஐ.ஏ.எஸ்” பரீட்சை எழுதச்செய்து, கலெக்டர் ஆக்க வேண்டும் என்பது அவருடைய பெற்றோரின் ஆசை.

19-வது வயதிலேயே எம்.ஏ பட்டப்படிப்பை முடித்துவிட்ட திருலோகசந்தர், 21 வயது ஆன பிறகுதான் ஐ.ஏ.எஸ்’ பரீட்சை எழுதமுடியும். எனவே ஒரு வருடம் வீட்டில் சும்மா இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் திருலோகசந்தரின் கல்லூரி தோழனான ராஜகோபால், தனது தந்தையான பட அதிபர் பத்மநாபனிடம் திருலோகசந்தருக்கு உள்ள கதை எழுதும் ஆற்றலைத் தெரிவித்தார்.

பத்மநாபன் ஒரு நாள் கதை விவாதத்திற்கு திருலோகசந்தரை அழைத்தார். அதுவே, திரைப்பட துறைக்குள் திருலோகசந்தர் நுழைய வாசலாக அமைந்தது.

1950-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்-ஸ்ரீரஞ்சனி நடித்த ‘குமாரி’ படத்தை பத்மநாபன் இயக்கினார். அந்த படத்திற்கு உதவி இயக்குனராக திருலோகசந்தர் பணியாற்றினார்.

தொடர்ந்து ‘எல்லாம் இன்பமயம்’ என்ற படத்திற்கும் உதவி இயக்குனராக இருந்தார். இந்த அனுபவங்கள் காரணமாக, ஜுபிடர் பிக்சர்ஸ் படங்களுக்கு நிந்தர உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

கலெக்டர் ஆகவேண்டியவர், திரைப்பட துறைக்கு வந்தது பற்றி தனது மறைவுக்கு(15.6.2016)முன்னர் ஒருமுறை திருலோகசந்தர் கூறியதாவது:-

என் தாயார் நிறைய புராண கதைகளை என்னிடம் சொல்வார்கள். அதனால் எனக்கு கதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. மிஸ் சந்திரா எம்.ஏ, திருசந்தர், திருலோகசந்தர் என்ற பெயர்களில் கதைகளை எழுதி இருக்கிறேன்.

ஆனால், என் தந்தைக்கு நாடகம், சினிமா என்றாலே பிடிக்காது. நான் கலெக்டர் ஆகவேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்.

எனவே, ஐ.ஏ.எஸ். பரீட்சை எழுத, என்னை நான் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

எனது கல்லூரித் தோழரின் தந்தை பத்மநாபன் அவர்கள் மூலமாக, திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

திரைப்படத்தில் நடிக்க வேண்டும்-நடிகராக வேண்டும் என்ற ஆர்வமும், கதை எழுதி திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வமும் எனக்குள் இருந்ததால், நான் விரும்பிய தொழிலுக்கு வந்தேன்.

திரைப்படத்தில் நடித்தால் மகன் கெட்டு விடுவான் என்று என் தந்தை நினைத்தார். அதனால், நடிக்கவே கூடாது என்று என்னிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டார். அதனால் கதை எழுதி, படங்களை இயக்கினேன்.

இவ்வாறு ஏ.சி.திருலோகசந்தர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

1960-ம் ஆண்டு சிட்டாடல் பிலிம் கார்பரேஷன் தயாரித்த ‘விஜயபுரி வீரன்’ படத்திற்கு ஏ.சி.திருலோகசந்தர் கதை எழுதினார். படத்தை ஜோசப் தளியத் இயக்கினார். நடிகர் ஆனந்தன் கதாநாயகனாக நடித்தார்.

1962-ம் ஆண்டு ஏ.சி.திருலோகசந்தர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அந்த திருப்பத்தை ஏற்படுத்தியவர் நடிகர் அசோகன். சினிமா படத்துக்கு கதை சொல்வதற்காக, ஏ.சி.திருலோகசந்தரை நடிகர் அசோகன், ஏவி.எம்.சரவணனிடம் அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார்.

அப்போது திருலோகசந்தர் தன்னிடமிருந்த 2 கதைகளை சரவணனிடம் கூறினார்.

அதில் வீரத்திருமகன்’ என்ற கதையை ஏவி.எம் நிறுவனம் படமாக எடுத்தது. அந்தப் படத்தை திருலோகசந்தர் இயக்கினார். ஆனந்தனும், சச்சுவும் நடித்தார்கள். படம் வெற்றி பெற்றது.

இதுபற்றி திருலோகசந்தர் கூறியதாவது:-

ஏவி.எம்.சரவணனை சந்தித்தது, என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அந்த சந்திப்பை ஏற்படுத்தி தந்தவர், என் இனிய நண்பர் எஸ்.ஏ.அசோகன்.

சரவணன் எனக்கு சரியான வழிகாட்டி, என் வாழ்க்கையை மாற்றி அமைத்தார்.

அவரைக் கேட்காமல், எந்த முக்கிய முடிவையும் நான் எடுத்ததில்லை. என் வாழ்க்கையின் முக்கிய திருப்பங்களில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.

ஏவி.எம்.சரவணனின் தந்தை ஏவி.மெய்யப்ப செட்டியார் என்னுடைய மாதா, பிதா, குரு, தெய்வமாக அமைந்தார்.

நான் சரவணனிடம் 2 கதைகளைக் கூறினேன். அந்தக் காலக்கட்டத்தில், அவர்கள் ராஜா-ராணி படங்களை எடுக்கவில்லை. எனினும் என் கதை பிடித்துப் போனதால், ‘வீரத்திருமகன்’ படத்தை எடுத்ததுடன், அதை டைரக்ட் செய்யும் வாய்ப்பையும் எனக்குக் கொடுத்தார்கள்.

என்னுடைய மற்றொரு கதையையும் ஏவி.எம் படமாக எடுத்தது. அதுதான் சிவாஜி, ஜெமினி, சாவித்திரி நடித்த ‘பார்த்தால் பசி தீரும்’. இப்படத்தை ஏ.பீம்சிங் டைரக்ட் செய்தார்.

இவ்வாறு திருலோகசந்தர் கூறியிருக்கிறார்.

திருலோகசந்தர் இயக்கிய பெரும்பாலான படங்கள் தமிழ் சினிமாவையும் அதன் நாயகர்களையும் நவீனப்படுத்திக் காட்டுவதில் வெற்றியடைந்திருக்கிறது.

அன்பே வா, தங்கை, என் தம்பி போன்ற படங்கள் தமிழ் திரையுலகத்தை மற்றொரு புதிய பாணிக்குத் திருப்பியிருக்கின்றன.

திருலோகசந்தர் படங்களில் நடிப்பதன் முலம் திலக நடிகர்கள் தங்கள் பிம்பத்தை உயர்த்திக் காட்டியிருக்கின்றனர்.

வீரத்திருமகன் இவர் இயக்கிய முதல் படம். ராஜா ராணிக் கதைகளிலும் இவர் நவீனத்தைப் புகுத்தியிருந்தார். ரோஜா மலரே ராஜகுமாரி பாடல் அதற்கு தக்க சான்றாக விளங்குகிறது.

பெரிய தடாகத்தில் தாமரை மலர்கள் விரிந்திருக்க அதில் நங்கையர் நின்றபடி நடனம் ஆடும் காட்சி பெரிய அளவில் பேசப்பட்டது.

தொடர்ந்து 1963ஆம் ஆண்டு ‘நானும் ஒரு பெண்’ வந்தது. ஏ.வி.எம் ராஜனை அறிமுகப்படுத்தி ஏமாறச் சொன்னது நானா என்ற பாடலை நவீன பாணி நடனத்தோடு பூங்காவில் ராஜனையும் புஸ்பலதாவையும உலா வரச் செய்திருப்பார்.

புதிய முயற்சியாக பி.சுசிலாவும் டி.எம்,எஸ்சும் தனித்தனியே பாடி படத்தில் இரண்டு முறை இடம் பெற்றிருக்கும்.

1965ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் ‘காக்கும் கரங்கள்’ வெளியானது. ஞாயிறு என்பது கண்ணாக பாடல் இன்றளவும் பேசப்படும் பாடலாக அமைந்து போனது. பாடலைப் படம் பிடிப்பதில் வல்லவர் என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய ராமு(1966) வெளிவந்து வெற்றி பெற்றது. வழக்கமான கதைகளைக் காட்டிலும் திரைக்கதையில் இவர் காட்டிய வேகம் திலக நடிகர்களை ஈர்த்தது. இதன் விளைவாக எம்.ஜி.ஆர் நடிக்க ‘அன்பே வா’ 1966ஆம் ஆண்டு வெளிவந்து திருலோகசந்தரை நட்சத்திர இயக்குநர் உயரத்திற்குக் கொண்டு சென்றது.

இதைப் பார்த்த சிவாஜி கணேசன் இவரை அழைத்தார். நல்ல கதையாக தயார் செய்து கொண்டு வா என்றார். ‘தங்கை’ படக்கதையை சிவாஜிக்கு இவர் சொல்ல படம் 1967ன் பிற்பகுதியில் வெளியானது.

சிவாஜி படம் என்றால் அதுவரையில் சோகம் மட்டுமே அதிகமாக இருக்கும். சிவாஜிக்கு ஸ்டைல் நடிப்பு வரும் என்பதை உணர்ந்து கொண்டு அதனை அதிகமாக தங்கையில் வெளிப்படச் செய்தார் திருலோகசந்தர்.

வீரத்திருமகனில் தொடங்கி நானும் ஒரு பெண்(1963), காக்கும் கரங்கள்(1965), ராமு(1966), அன்பே வா(1966), தங்கை(1967), இரு மலர்கள்(1967), அதே கண்கள்(1967), என் தம்பி(1968), அன்பளிப்பு(1969), தெய்வமகன்(1969), திருடன்(1969), எங்க மாமா(1970), எங்கிருந்தோ வந்தாள்(1970), பாபு(1971), தர்மம் எங்கே(1972), அவள்(1972), இதோ எந்தன் தெய்வம்(1972), பாரத விலாஸ்(1973), சொந்தம்(1973), ராதா(1973), தீர்க்க சுமங்கலி(1974), அவன்தான் மனிதன்(1975), அன்பே ஆருயிரே(1975), டாக்டர் சிவா(1975), பத்ரகாளி(1976), நீயின்றி நானில்லை(1976), பெண் ஜென்மம்(1977), வணக்கத்திற்குரிய காதலியே(1978), பைலட் பிரேம்நாத்(1978), லாரி டிரைவர் ராஜாக்கண்ணு(1981), வசந்தத்தில் ஓர் நாள்(1982), அன்புள்ள அப்பா(1987) என தொடர்ந்து புதுமைக் கதைகளை  திரைப்படமாக வழங்கினார்.

இவர் வேண்டாம் என்று வற்புறுத்தியும் நடிகர் ஏவிஎம் ராஜன் வற்புறுத்தல் பேரில் அவர் சொந்தமாகத் தயாரித்த லாரி டிரைவர் ராஜாக்கண்ணுவை இயக்க நேர்ந்தது. சிவாஜி கணேசன் நடித்திருந்தும் படம் படுதோல்வி அடைந்தது. தெலுங்கு வாடையுடன் இருந்ததால் படத்தை தமிழ் ரசிர்கள் ஏற்காமல் போயினர்.

திருலோகசந்தர் திறமைசாலி. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து உயர்த்தி விட நினைத்த சிவாஜி கணேசன் அன்புள்ள அப்பா படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.

படம் வெற்றி பெற்றது என்றாலும் அதற்கு மேலும் திரைப்படங்களை இயக்குவதற்கான தெம்பு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார் திருலோகசந்தர். உடல் வாதை வாட்டி நோயாளியாகவும் அவர் மாறியதால் திரைப்படங்களை இயக்குவதிலிருந்து பின்வாங்கினார்.

இவர் இயக்கிய ‘பத்ரகாளி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது கதாநாயகியாக நடித்த நடிகை ராணி சந்திரா விமான விபத்தில் இறந்து போனபோது மிகவும் சாமர்த்தியமாக இயங்கி படத்தை முடித்து வெளியிட்டார் ஏ.சி.திருலோகச்சந்தர்.

ராணி சந்திரா விமான விபத்து குறித்து பிரிதொரு நாளில் விரிவாகப் பேசுவோம்,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here