158 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் நெருங்கத் தயங்கி வரும் மர்ம மாளிகையில் அடிக்கடி தீச்சம்பவம் ஏற்பட்டு பரபரப்பாகி வருகிறது. தீ சம்பவத்திற்கான பின்னணி என்ன என்பதைக் கண்டறிந்து வர பினாங்கு நோக்கி புறப்படுகிறார்கள் நமது நிருபர்கள்,.
பத்து கவான், பைரம் தோட்டத்திற்கு அருகில் உள்ளது “99 மேன்சன்” என்ற பெயர் கொண்ட மர்ம மாளிகை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு ஏற்பட்ட தீச்சம்பவம் இந்த மாளிகை குறித்த பரபரப்பை மீண்டும் உயர்த்தியிருப்பதாக பினாங்கு மாநில தீயணைப்புத் துறை துணைத்தலைவர் முகமட் கவிஸ் கர்னி அப்துல் ரகுமான் கூறியிருக்கிறார்.
இந்த மாளிகை ஏன் இத்தனை ஆண்டு காலமாக மனித நடமாட்டத்திற்கு அப்பால் உள்ளது என்ற கேள்வி எழுகிறது.
பிரிட்டிசார் ஆட்சிக் காலத்தில் ராம்ஸ்டன் என்ற பெயர் இப்பகுதியில் பிரபலமாக இருந்தது.
ராம்ஸ்டன் குடும்பத்திற்கு ஏக்கர் கணக்கில் ரப்பர் தோட்டங்களும் கரும்புத் தோட்டங்களும் உடமையாக இருந்தன.
ஆயிரக்கணக்கான ஏக்கரில் செம்பனைத் தோட்டங்களும் இருந்தன. இதன் காரணமாக அதிகமாக இந்தியர்கள் இங்கு வேலை பார்த்து வந்திருக்கின்றனர். அவர்கள் தங்குவதற்கு ஏதுவாக தோட்ட வீடுகளும் அமைக்கப்பட்டு இங்கு அவர்கள் குடியிருந்து வந்திருக்கின்றனர்.
இதனால் இப்பகுதியில் பல தோட்டங்களும் தோட்டங்களைச் சார்ந்த குடியிருப்பும் குடியிருப்பைச் சார்ந்த இந்து ஆலயங்களும் உருவாகின.
ராம்ஸ்டன் குடும்பம் குடியிருப்பதற்காக 99 கதவுகளைக் கொண்ட மாளிகையும் உருவாக்கப்பட்டது. இந்த மாளிகையை உருவாக்கியவர்கள் தோட்ட மண்ணின் மைந்தர்கள் என்பது வரலாறாக உள்ளது.
முழுக்க இந்தியர்களால் கட்டமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட மாளிகை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. அழகிய பூந்தோட்டத்திற்கு மத்தியில் கட்டி முடிக்கப்பட்ட இந்த மாளிகைதான் சுமார் 158 ஆண்டுகளாக மனிதர்கள் அண்டுவதற்கு பயந்த நிலையில் தன்னந்தனியே காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது.
ராம்ஸ்டன் குடும்பத்தாரின் வாழ்க்கையை ஒரு கொலைச்சம்பவம் திருப்பிப் போட்டிருக்கிறது.
மாளிகையின் வாசற்படிக்கு அப்பால் வலதுபுறமாக ஏறும் படிகளில் ராம்ஸ்டன் வம்ச குடும்ப உறுப்பினர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது ஆவிதான் யாரையும் இங்கு அண்ட முடியாத அளவுக்குச் செய்திருக்கிறது என்ற தகவல் வட்டார மக்கள் நன்கறிந்த தகவலாக உள்ளது.
அச்சம் ஏதுமில்லை என்று கூறி ஒரு இந்தியக் குடும்பமும் இங்கே உள்ள ஒரு அறையில் போய் தங்கியிருக்கிறது. ஆவி, அவர்களையும் அங்கிருந்து துரத்தி விட்டது என்பதுவும் ஒரு மர்ம நிகழ்வாக உள்ளது.
மாளிகையை நோக்கி புயல் காற்று ஒன்று புறப்பட்டு மாளிகையின் உள்ளே நுழைந்து காற்றோடு காற்றாக கரைந்து போய்விடுகிறது. ஏன் இந்தப் புயல் வருகிறது,,, அது எங்கிருந்து வருகிறது என்பது யாருக்கும் தெரியாது.
பட்டப்பகல் நேரத்திலும் புயல் வரக்கூடும். அப்போது நாய் குரைக்கும்,,, குரைக்கும் நாயைத் தேடினால் நாய் கண்ணில் படாது. இது தான் இந்த மர்ம மாளிகையின் நிலைமை.
இங்கு செல்பவர்களுக்கு அசீரிரி குரல் மட்டும் கேட்கும். ஐந்து பேர் இங்கு போனால் அதில் ஒருவருக்கு மட்டும் அசீரிரி குரல் கேட்கும். அவ்வளவுதான் கதை. ஐவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விடுவார்கள்.
மாளிகையை நோக்கி நகரும் காற்றும் புயல் போல இருப்பதால் ஆவிகள் அதனை செலுத்துவதாக இருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் இப்பகுதியை நெருங்குவதற்கே பயப்படுகிறார்கள்.
மிகச் சரியாகச் சொல்லப்போனால் நிபோங் திபால் நகருக்கு அருகில்தான் இந்த மாளிகை உள்ளது.
10 அறைகள், நடன அரங்கம், மிகப் பெரிய சமையல் கூடம் கொண்ட இந்த மர்ம மாளிகையில் அப்படி என்னதான் உள்ளது?
அடிக்கடி தீச்சம்பவங்கள் ஏற்படுவதற்கான காரணம் என்ன?
இந்தக் கேள்விகளுக்கு விடை காண மர்ம மாளிகையை நோக்கி நமது ஓசை ஆன்லைன் நிருபர்கள் சூரியகுமார் முருகனும், பார்த்திபனும் நிபோங் திபால் நோக்கிப் புறப்படுகிறார்கள்.
நமது நிருபர்கள் கொண்டு வரும் மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவங்களை விரைவில் ஆன்லைன் வீடியோவாகக் காணத் தயாராகுங்கள்…