குடும்பத்தகராறில் 2 குழந்தைகளை ஆற்றில் தள்ளி கொன்ற தாய் கைது

தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி 2-ம் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செந்தமிழ்செல்வி (37). இவர்களுக்கு சுவேதா(12) என்ற மகளும், கோகுல்செழியன்(4) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தது.
சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த செந்தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார். ஆனால் தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் தனது குழந்தைகள் அனாதையாகி விடுவார்களே என்று எண்ணிய செந்தமழிச்செல்வி குழந்தைகளை கொன்று விட்டு தான் தற்கொலை செய்வது என்று எண்ணினார். அதன்படி நேற்று அதிகாலை தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சேவப்பநாயக்கன்வாரி பகுதியில் உள்ள கல்லணைக்கால்வாய் பாலத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் தனது மனதை கல்லாக்கிக்கொண்டு தான் பத்து மாதம் சுமந்து பெற்ற 2 குழந்தைகளையும் ஒவ்வொன்றாக ஆற்றில் தள்ளி விட்டார். பின்னர் செந்தமிழ்ச்செல்வியும் ஆற்றில் குதித்தார். அப்போது குழந்தைகள் தங்களை காப்பாற்றுமாறு சத்தம் போட்டனர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர்.
பின்னர் இது குறித்து தஞ்சை தீயணைப்புநிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் திலகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் குதித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் செந்தமிழ்ச்செல்வியை மட்டும் உயிருடன் மீட்டனர். பின்னர் அவருக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
2 குழந்தைகளும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுவன் உடல் தஞ்சையை அடுத்த கண்டிதம்பட்டு பகுதியில் கல்லணைக்கால்வாயில் கரை ஒதுங்கியது. சிறுவனின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். சுவேதாவும் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் தேடி வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் செந்தமிழ்ச்செல்வியையும், அவருடைய கணவர் சுரேஷையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து செந்தமிழ்ச்செல்வி மீது போலீசார் கொலை வழக்கு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here