‘எம்எஸ்யூ’ எனப்படும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்துடன் மலேசிய நீர்ப்பாசன இலாகா புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இந்த நிகழ்ச்சி ஷாஆலம் நகரிலுள்ள எம்எஸ்யூ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இயற்கை சுற்றுச்சுழல் அமைச்சின் கீழ் இயங்கும் ‘காசா’ எனப்படும் நதி மேலாண்மை மற்றும் நதிக்கரை மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் டத்தோ இன்ஜினியர், டாக்டர் ஸைனி உஜாங் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எம்எஸ்யூவின் தலைவர் பேராசிரியர் டான்ஸ்ரீ டத்தோ வீரா டாக்டர் முகமட் சுக்ரி அப்துல் யாஜிட் கலந்து கொண்டார்.
நதி நீர் மேலாண்மையுடன் நதிக்கரைகளில் தனிவழிப் பாதைகள் அமைப்பது தொடர்பிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக நதிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டது. நதி வழிப் பாதைகளை அமைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு நதிகள் மீதான அக்கறையை உருவாக்க முடியும். நதிகளில் குப்பைகளை போட்டு விட்டுச் செல்லும் பொறுப்பற்ற தரப்பினரின் நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
முதல் கட்டமாக டாமான்சாரா ஆற்றின் இரு கரைகளிலும் தனி வழிப் பாதைகள் உருவாக்கப்படும். இதற்கான முழுச் செலவை எம்எஸ்யூ பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ளும் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டது. ஆறுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக கல்வித் திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை அமல்படுத்தப்படவுள்ளன. ஆற்றங்கரையில் மரங்களை நடுவதும் இத்திட்டத்தில் அடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது,