தூதரக ஒப்பந்தத்துக்கு ஈரான் கடும் கண்டனம்

1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வளைகுடா நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. எனினும் இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபு நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் அந்த நாட்டுடன் தூதரகம், வர்த்தகம் என எந்த விதமான உறவுகளையும் அரபு நாடுகள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி அரபு நாடுகள் இஸ்ரேலுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வருகின்றன.

எனினும் 1979-ம் ஆண்டு எகிப்தும், 1994-ம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன.

அதன் மூலம் அந்த 2 நாடுகளும் இஸ்ரேலுடன் தூதரகம் உள்ளிட்ட உறவுகளை ஏற்படுத்திக்கொண்டன. இஸ்ரேலை கடுமையாக எதிர்த்து வந்த ஒரு அரபு நாடு ஐக்கிய அரபு அமீரகம். 1971-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அதிபரான ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் இஸ்ரேலை ‘எதிரி’ என்று குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக பாலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இஸ்ரேலை ஐக்கிய அரபு அமீரகம் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது.

இது ஒருபுறம் இருந்தாலும் இஸ்ரேலுடன் நெருங்கிய நட்புறவை கடைபிடித்து வரும் அமெரிக்கா இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இதன் பலனாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே வரலாற்று சிறப்புமிக்க தூதரக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக உறவு உருவாகியுள்ளது.

இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்திக்கொண்ட முதல் வளைகுடா நாடு மற்றும் 3-வது அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அலுவலகம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் இடையே முழு அளவிலான உறவுகளை மேற்கொள்ள முடிவாகியது” என்று தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவவும், பிராந்திய வளர்ச்சிக்குப் புதிய பாதை வகுக்கவும் இந்த தூதரக ஒப்பந்தம் உதவும். வரும் வாரங்களில் தூதரகங்கள் அமைப்பது பற்றி பேசி முடிவாகும். அத்துடன், தொழிலகம், சுற்றுலா, விமானப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, எரிசக்தி துறைகளில் இணைந்து செயலாற்றுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிவெடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதுபற்றி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “மிகப் பெரிய செய்தி. இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் என்னும் இரு பெரும் நண்பர்கள் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஏற்பட்டுள்ள இந்த தூதரக ஒப்பந்தத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாலஸ்தீனம் இது ஒரு தேசத்துரோக நடவடிக்கை என தெரிவித்துள்ளது.

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தங்கள் நாட்டு தூதரை நாடு திரும்பும்படி பாலஸ்தீன அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் இஸ்ரேலும், ஐக்கிய அரபு அமீரகமும் தூதரக உறவை தொடங்கி இருப்பதை ஈரான், துருக்கி ஆகிய நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐக்கிய அரபு அமீரகம் உடனான உறவுகளை இயல்பாக்குவதை பாலஸ்தீனர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இதன் மூலம் இனி வளைகுடா நாடுகளின் உள்விவகாரங்களில் இஸ்ரேல் தலையிட முயற்சிக்கும். இது ஏற்கத்தக்கது அல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here