9 அல்லது 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ம.இ.கா. போட்டி

கோலாலம்பூர், ஆக. 15-

நாட்டில் பொதுத்தேர்தல் நடக்குமாயின் மஇகா 9 அல்லது 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடலாம் என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சூசகம் தெரிவித்தார்.

நேற்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். அடுத்த பொதுத்தேர்தல் வேட்பாளர் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் மஇகா 9 அல்லது 10 நாடாளுமன்ற இடங்களில் போட்டியிடலாம். அந்தத் தொகுதிகளில் அதற்கான வேட்பாளர்களையும் மஇகா அடையாளம் கண்டுவிட்டது.

வேட்பாளர்களும் தங்கள் தொகுதிகளில் பணிகளைத் தொடங்கியுள்ளனர். ஆயினும் ஒரு சில இடங்களில் சிறுசிறு குளறுபடிகள் இருப்பதால் அந்த வேட்பாளர்கள் குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.

அதே சமயம் சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் கட்சியின் கிளைகளைச் சீர்படுத்தும் பணிகளில் நாங்கள் தற்போது இறங்கியுள்ளோம். குறிப்பாக கிளைகளுக்கும் அப்பகுதி வாழ் மக்களுக்கும் நல்ல புரிந்துணர்வு இல்லை என்ற பட்சத்தில் அக்கிளைகள் கலைக்கப்படலாம்.

உதாரணத்திற்கு அந்தப் பகுதி மக்களுடன் கிளைப் பொறுப்பாளர்கள் நல்ல அணுகுமுறை இல்லாமலும் வாக்காளர்களைப் பதிவு செய்யக்கூட நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் கிளைகள் கலைக்கப்பட்டு அதற்கு மாற்றாக புதிய கிளைகள் அவ்விடத்திலேயே தொடங்கப்படலாம்.

மஇகா என்று@ம சமுதாயத்தின் கட்சியாகும். மக்களுக்கு சேவையாற்றவே இக்கட்சி உள்ளது. இதனை உணர்த்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.

எனவே கிளைப் பொறுப்பாளர்களுக்கு இது தொடர்பில் ”சுமார் 3 வாரங்களில் இருந்து ஒரு மாதம்வரை கால அவகாசம் வழங்கப்படும். அதற்குள் அவர்கள் தங்கள் கிளைகளின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த மத்திய செயலவைக் கூட்டத்தில் அவருடன் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், உதவித் தலைவர்களான டத்தோ டி. மோகன், டத்தோ சி. சிவராஜ், டத்தோ தொ. முருகையா, தேசிய இளைஞர் பகுதித் தலைவர் தினாளன் ராஜகோபாலு, மகளிர் பிரிவுத் தலைவி உஷாநந்தினி, மத்திய செயலவை உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here