பைரவர் மகிமையும்… பெயர் காரணமும்…

பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடி வருபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்பது பெயராயிற்று.

‘பை’ என்பது உலகில் உயிர்களை தோற்றுவிக்கும் படைப்புத் தொழிலையும், ‘ர’ என்பது தோன்றிய உயிர்களைக் காப்பதையும் ‘வ’ என்பது வாழ்ந்து முதிர்ந்த உயிர்களை தன்னுள் ஒடுக்கிக் கொள்வதையும் குறிக்கின்றன. படைத்தல், காத்தால், அழித்தல் எனும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் ‘பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார்.

பைரவர் என்னும் இவர் சிவனது அம்சம் என்று சொல்லப்படுகிறது. பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல்-அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர் களையும் காப்பதால் அவருக் குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது.

படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார். அதன்பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார்.

இவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைவது நம்மை இடுக்கண்களிலிருந்து காப்பாற்றுவார் என்றில்லை. எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும் சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்து களிலிருந்து காப்பாற்றுவார்.

பைரவர் நீலநிற மேனி கொண்டவர், சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவர், பாம்புகள் பொருந்திய திருஅரையும், தலை மாலைகள் புரளும் திருமார்பும், சூலத், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் பெற்றவர். சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், பெரிய தான இரண்டு கோரைப்பற்களை உடையவராய் காட்சியளிப்பார். செஞ்சடை உடையவராய், கோபச்சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராகவும் காட்சியளிப்பார் என்று புராணங்கள் பைரவரின் தோற்றத்தை கூறுகின்றன.

உடற்பற்றை நீக்கியபடியால் பைரவர் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கின்றார். ஸ்ரீபைரவர் கால் தெய்வமாகையால் காவல் குறியீடான நாயை வாகனமாக கொண்டுள்ளார். இந்த நாயானது பைரவருக்குப் பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடப்புறம் நேராகவும் நிற்கின்றது. சில சிற்பக் கலைஞர்கள் பைரவரின் கரத்திலுள்ள வெட்டுண்ட தலையிலிருந்து வடியும் இரத்தத்தை நாய் சுவைப்பது போல் வடிவமைத்துள்ளனர்.

பைரவரின் பொதுவான சிற்பத்திற்கு ஒரு நாய் மட்டுமே வாகனமாக அமைக்கப்படும் சில அபூர்வமான பைரவ சிலைகள் இரண்டு, நான்கு நாய்கள், ஏழு நாய்கள் என்றும் அமைக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here