நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து காலவரையின்றி ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஒருசில சிறப்பு ரெயில்களும், சரக்கு ரெயில்களும் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், அதில் பயணம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகள் அவற்றை ரத்து செய்து, அதற்கான கட்டணத்தை திரும்ப பெற்றுள்ளனர்.
இவ்வாறு ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மற்றும் திரும்ப செலுத்தப்பட்ட பணம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் ரெயில்வேக்கு கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு ரெயில்வே பதில் எழுதியுள்ளது.
அதன்படி, கடந்த 5 மாதங்களில் 1 கோடியே 78 லட்சத்து 70 ஆயிரத்து 644 டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதற்காக பயணிகளுக்கு ரூ.2,727 கோடி திரும்ப செலுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் டிக்கெட் ரத்துக்கான கட்டணப்பிடித்தம் எதுவுமின்றி முழு தொகையும் பயணிகளுக்கு திரும்ப வழங்கப்பட்டு உள்ளதாக ரெயில்வே கூறியுள்ளது.
ரெயில்வே வரலாற்றில் முதல் முறையாக டிக்கெட் கட்டணத்தைவிட திரும்ப செலுத்திய கட்டணம் அதிகமான காலமாக இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு திகழ்ந்துள்ளது. ஏனெனில் இந்த காலாண்டில் ரூ.1,066 கோடி எதிர்மறை (மைனஸ்) வருமானமே ரெயில்வேக்கு கிடைத்துள்ளது.
இதைப்போல கடந்த 2019-20-ம் நிதியாண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து வசூலித்த அபராத தொகை குறித்தும் சந்திரசேகர் கவுரின் கடிதத்துக்கு ரெயில்வே பதிலளித்து உள்ளது.
அதன்படி 2019-20-ம் நிதியாண்டில் 1.10 கோடிக்கு மேற்பட்ட பயணிகளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் அபராதத்தொகை மூலம் ரூ.561.73 கோடி வருமானம் ரெயில்வேக்கு கிடைத்து உள்ளது. இது முந்தைய நிதியாண்டைவிட 6 சதவீதம் அதிகம் ஆகும்.
டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் மக்களிடம் இருந்து பயணக்கட்டணத்துடன் குறைந்தபட்சம் ரூ.250-ஐ அபராதமாக ரெயில்வே வசூலிக்கிறது. அதை செலுத்த மறுக்கும் பயணியை நீதிபதி முன் நிறுத்தி ரூ.1,000 வரை அபராதம் வசூலிக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.