73 நாளில் கொரோனா தடுப்பூசியா?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும் என்று நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் சேர்ந்து கூட்டாக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனை பல நாடுகளில் நடக்கிறது.

இந்தியாவில் புனேயில் உள்ள மருந்து நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், கோவிஷீல்டு என இந்தியாவில் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்து வினியோகிக்க அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் நடத்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 5-ந் தேதி அனுமதி அளித்துள்ளது.

அதன் அடிப்படையில், ஆரோக்கியமான 1,600 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி இன்னும் 73 நாட்களில் கிடைக்க உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இதை இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதையொட்டி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பாக தற்போது ஊடகங்களில் வெளியாகி உள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை மற்றும் கற்பனையானவை. தற்போது தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கும், எதிர்கால பயன்பாட்டுக்காக சேமித்து வைக்கவும் அரசாங்கம் எங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது” என கூறப்பட்டுள்ளது.

மேலும், “சோதனைகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டதும், தேவையான அனைத்து ஒழுங்குமுறை ஒப்புதல்களும் கிடைத்த உடன் கோவிஷீல்டு தடுப்பூசி விற்பனைக்கு வரும்” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here