பயனாளிகளுக்கு தொலை தொடர்பு மருத்துவ சேவை

மத்திய அரசு சுகாதார திட்ட பயனாளிகளுக்கு தொலை தொடர்பு மருத்துவ சேவை அறிமுகம் ஆகி உள்ளது. இதில் ‘வீடியோ கால்’ மூலம் டாக்டரை கலந்தாலோசிக்கலாம். கொரோனா காலத்தில் இது வரமாக அமையும்.

இந்நாள் மற்றும் முன்னாள் மத்திய அரசு ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சி.ஜி.எச்.எஸ். என்னும் மத்திய அரசு சுகாதார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போன்று இந்நாள், முன்னாள் எம்.பி.க்கள், கவர்னர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், ரெயில்வே வாரிய பணியாளர்கள் போன்றோரும் இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ வசதி பெற முடியும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிற ஒரு காலச்சூழலில், பொதுவான பிரச்சினைகளுக்கு டாக்டர்களை, கிளினிக்குகளை, ஆஸ்பத்திரிகளை நாடிச்செல்லவே பலரும் பயப்படுகிறார்கள். இதனால் மருத்துவம், எலும்பியல், கண், இ.என்.டி. என அழைக்கப்டுகிற காது, மூக்கு, தொண்டை மருத்துவம் ஆகிய 4 சிறப்பு துறைகளில் தொலைதொடர்பு மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் சென்றன.

அவற்றை பரிசீலித்த மத்திய அரசு, இந்த தொலை தொடர்பு மருத்துவ சேவையை கடந்த 25-ந் தேதி முதல் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் பலனை மத்திய அரசு சுகாதார திட்ட பயனாளிகள் அனைவரும் பெற்று பலன் அடைய முடியும்.இது அவர்களுக்கு ஒரு வரமாகவே அமைகிறது. இருந்த இடத்தில் இருந்து கொண்டே தங்கள் பிரச்சினைகளுக்கு சிறப்பு நிபுணர்களுடன் கலந்தாலோசனை செய்து சிகிச்சை பெற வழி பிறந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த சேவை, இப்போது டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை எல்லா வேலை நாட்களிலும் கிடைக்கிறது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் சஞ்சீவாணி தளத்தின் மூலம் இந்த வசதியை பெற முடியும். இதற்கான நடைமுறை இதோ-

* முதலில் பயனாளி, மத்திய சுகாதார அமைச்சகத்தின் சஞ்சீவாணி தளத்தில் தங்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

* அதன்பின்னர் அவர்களுக்கு ஓ.டி.பி. என்னும் ஒரு நேர பயன்பாட்டு கடவுச்சொல் வரும்.

* தொடர்ந்து பயனாளிகள் ‘லாக் ஆன்’ செய்ய வேண்டும். (இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்). விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். இது டோக்கனுக்கான விண்ணப்பமாக அமையும். உங்கள் முந்தைய மருத்துவ குறிப்புகளை பதிவேற்றம் செய்யலாம். அதன்பின்னர் பயனாளிகளுக்கு ஐ,டி.யும், டோக்கனும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் வரும். அவர்கள் ஆன்லைன் வரிசையில் காத்திருக்க வேண்டும்.

* பயனாளிகளின் முறை வரும்போது, ‘கால் நவ்’ பொத்தானை அழுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து வீடியோ காலில் சிறப்பு மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசிக்கலாம்.

* கலந்தாலோசனை முடிந்தபின்னர் மருந்து சீட்டு ஆன்லைனில் வரும். அதை மத்திய சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் வெல்னஸ் சென்டரில் கொடுத்து மருந்துகள் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டம் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகையில்,“ இந்த புதிய தொலைதொடர்பு மருத்துவ சேவையானது, மத்திய சுகாதார திட்ட பயனாளிகளுக்கு, அதுவும் கொரோனா காலத்தில் வெளியே செல்ல முடியாத தருணத்தில், மருத்துவ நிபுணர்களை கலந்தாலோசிக்க ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்” என குறிப்பிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here