இந்து முறைப்படி உடலை அடக்கம் செய்த முஸ்லிம் வாலிபர்கள்

பெங்களூரு புறநகரை சேர்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது. இதில் அந்த பெண்ணுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த பெண் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணுக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்து இருந்தது. ஆனால் அந்த பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்ததால், குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் குழந்தையை தனியாக வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் பிறந்த 4 மணி நேரத்திலேயே அந்த குழந்தை கொரோனாவுக்கு இறந்து விட்டது. ஆனால் குழந்தையை பார்க்க தந்தையோ, குடும்பத்தினரோ வரவில்லை. ஏனெனில் குழந்தையின் தந்தை தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். தாயும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தையை பார்க்க அதன் உறவினர்களும் வரவில்லை. இதனால் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய யாரிடம் ஒப்படைப்பது என்று டாக்டர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதுபற்றி பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமதுகான் நடத்தி வரும் தன்னார்வ தொண்டு அமைப்பினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த அமைப்பில் இருந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற சில முஸ்லிம் வாலிபர்கள் கொரோனாவுக்கு இறந்த குழந்தையின் உடலை பெற்று கொண்டனர். பின்னர் அந்த குழந்தையை ஆம்புலன்சில் எடுத்து சென்றனர். சாம்ராஜ்பேட்டையில் உள்ள மயானத்திற்கு குழந்தையின் உடலை எடுத்து சென்ற முஸ்லிம் வாலிபர்கள் அங்கு குழிதோண்டி அடக்கம் செய்தனர். அதாவது அந்த குழிக்குள் பூக்களை தூவி பால் ஊற்றி இந்து முறைப்படி அந்த குழந்தையின் உடலை முஸ்லிம் வாலிபர்கள் அடக்கம் செய்தனர். ஏனெனில் அந்த குழந்தை இந்து தம்பதியினருக்கு பிறந்த குழந்தை ஆகும். இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here