குப்பை வண்டியில் உணவு சப்ளை

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட, குறைவான பாதிப்புடைய குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 51 பேர் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி செம்புளிச்சாம் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மாத்திரை உட்கொள்வதற்கு சுடு தண்ணீர் தர மறுப்பதாகவும், கழிவறையில் தண்ணீர் வசதியில்லை. குப்பைகள் சுத்தப்படுத்தப்படாமல் தேங்கி இருப்பதாக முகாமில் தங்கி உள்ளவர்கள் குற்றம் சாட்டினர்கள்.

தூய்மை பணியாளர்கள் பணி செய்ய வர மறுப்பதாகவும், தங்களுக்கான உணவு பொருட்களை குப்பை வண்டியில் வைத்து கொண்டு வந்து வினியோகிப்பதாகவும் தெரிவித்தனர். இது போன்ற சூழல் தங்களை மேலும் அதிக அளவிலான நோய் தொற்றுக்கு கொண்டு செல்லும் என அச்சம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நோயாளிகள் அனைவரும் தாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை நோயாளிகளில் ஒருவரே தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளத்தில் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து பவானி தாசில்தார் அங்கு சென்று நோயாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்களது அனைத்து தேவைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here