நாட்டையே உலுக்கிய இரட்டை கொலை சம்பவம்

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை வழக்கில் சில மணி நேரங்களில் குற்றவாளியை அடையாளம் கண்ட பொலிஸ். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதியில் வசித்து வந்த மூத்த ரயில்வே அதிகாரியின் மனைவியும் மகனும் குடியிருப்புக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமடைந்த விவகாரத்திலேயே பொலிசார் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர்.

ரயில்வே அதிகாரியின் மகளும் தேசிய அளவில் பிரபலமான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவருமான 14 வயது சிறுமியே தாயாரையும் சகோதரரையும் சுட்டுக் கொன்றதாக பொலிசார் கண்டறிந்துள்ளனர். தனிப்பட்ட விசாரணையில் சிறுமி குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், முழு காரணங்களையும் பொலிசாரிடம் வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ரயில்வே அதிகாரியின் மனைவியும் மகனும் நேற்று துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். 14 வயதேயான மகள் காயங்களுடன் தப்பியிருந்தார். பாதுகாப்பு மிகுந்த பகுதியில் இவ்வாறான ஒரு தாக்குதல் சம்பவம் காவல்துறை அதிகாரிகளையும் மாநில அரசாங்கத்தையும் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வைத்தது. கொள்ளை சம்பவம் அல்ல என உறுதியானதுடன், காயங்களுடன் தப்பிய 14 வயது சிறுமி மீது பொலிசாரின் பார்வை திரும்பியது.

கண்காணிப்பு கமெரா பதிவுகளில், குடியிருப்புக்கு எவரும் வந்து செல்லவில்லை என்பதை பொலிசார் உறுதி செய்தனர். ஆனால் சிறுமியின் படுக்கையறையும் குளியலறையும் பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதனையடுத்து உளவியல் நிபுணர் ஒருவரின் உதவியுடன் சிறுமியை விசாரித்த பொலிசாருக்கு இரட்டைக்கொலை வழக்கில் உண்மை குற்றவாளி யார் என்பது தெரியவந்தது.

கடுமையான மன அழுத்தத்திற்கு அடிமையான சிறுமி, தமக்கு மிகவும் பிடித்தமான ஒரு ஜப்பானிய புதினத்தில் நடப்பது போன்று தாயாரையும் சகோதரரையும் கொன்றுள்ளார். குளியலறையில் அவர் எழுதி வைத்த வாசகமும், கண்ணாடியை துப்பாக்கியால் சுட்டதும், பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. தாயாரும் சகோதரரும் தூக்கத்தில் இருக்கவே இருவரையும் சிறுமி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

கொலைக்கு முன்னர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குளித்துள்ளார். பின்னர் கண்ணாடியில், மனிதனாக இருக்கத் தவறி விட்டேன், ஒரு மனிதனாகும் தகுதியை இழந்து விட்டேன் என ஜாம் கொண்டு எழுதியுள்ளார். தொடர்ந்து தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கியால் தனது உருவம் தெரிந்த கண்ணாடி மீது சுட்டுள்ளார். பின்னர் தாயாரையும் சகோதரரையும் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் தமக்கு தாமே காயங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here