உடைப்படும் அபாயத்திலிருந்து ஜாலான் லங்காக் புக்கிட் கம்பம் தற்காலிகமாக தப்பியது

கோலாலம்பூர், செப். 3- உடைப்படும் அபாயத்திலிருந்து ஸ்தாப்பாக் ஜாலான் லங்காக் புக்கிட் கம்பம் தற்காலிகமாக காப்பாற்றப்பட்டுள்ளது என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.

அங்குள்ள மக்கள் குடியிருக்கும் நிலத்தை மேம்பாட்டு நிறுவனம் வாங்கியிருப்பதால் கடந்தாண்டு குடியிருப்பாளர்களை காலிச் செய்யும் படி கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இதே இடத்தில் வாழ்ந்த இவர்கள் திடிரென வெளியேறச் சொன்னதும் எங்கே செல்வது என்று திக்குமுக்காடிப் போய் நின்றனர்.

இந்த வட்டாரம் தொடக்கத்தில் செத்தியவங்சா நாடாளுமன்ற தொகுதியில் கீழ் தான் இருந்தது. பின்னர் தொகுதி பங்கீட்டின் போது இந்த வட்டாரம் பத்து நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வந்தது. அதன் அடிப்படையில் குடியிருப்பாளர்கள் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் தம்மை நாடியதாக அவர் கூறினார்.

 

இங்கு மொத்தம் 10 வீடுகள் இருக்கின்றன. 14 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் குடியிருந்த நிலத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதில் அந்நிறுவனம் குறியாக இருக்கிறது.

மக்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என்று குடியிருப்பாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் விண்ணப்ப மனு கோரப்பட்டது. ஆனால் அதில் குடியிருப்பாளர்கள் தரப்பு தோல்வி கண்டது. எனவே குடியிருப்பாளர்களை அங்கிருந்து விரைந்து வெளியேறுமாறு மேம்பாட்டு நிறுவனம் கேட்டு கொண்டது.

இதற்கிடையில் இங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு தற்காலிகமாக பிபிஆர் வீடுகள் கிடைக்க வழி செய்தோம். அப்போது கூட்டரசு பிரதேச அமைச்சராக இருந்த காலிட் சாமாட்டிம் பேசி வீடுகள் பெறப்பட்டது. அதில்
சிலருக்கு வீடுகள் கிடைத்து வெளியேறியவர்களும் இருக்கின்றனர். பிபிஆர் வீடுகள் கிடைத்து இன்னும் சாவி கிடைக்காமல் இருக்கின்றவர்களும் இருக்கின்றனர். அதே போன்று வீட்டிற்காக விண்ணப்பம் செய்து இன்னும் கடிதம் எதும் கிடைக்காதவர்களும் இருக்கின்றனர்.

இங்குள்ள 14 குடும்பங்களுக்கு நஷ்ட ஈடாக மொத்தமாக ஒரு லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் குடியிருப்பாளர்களின் கைகளுக்கு பணம் வரவில்லை. காரணம் இங்கிருந்து அவர்கள் வெளியேறினால் மட்டும் அந்த பணத்தை கொடுக்கும் முடிவில் மேம்பாட்டு நிறுவனம் இருக்கின்றது.

ஏற்கெனவே மேம்பாட்டு நிறுவனம் இங்குள்ள வீடுகளை உடைக்க வந்த போது, அவர்களிடம் கால அவகாசமாக 14 நாட்கள் கேட்டோம். இருந்தும் குடியிருப்பாளர்களின் வீட்டு பிரச்சினைகள் தீரவில்லை. இன்று காலை 10 மணியளவில் மேம்பாட்டு நிறுவனம் மீண்டும் வீடுகளை உடைக்க வந்தது. ஆனால் தமது தலைமையில் குடியிருப்பாளர்களின் வழக்கறிஞர் ராஜேஸ்வரி ஆகியோர் மேம்பாட்டு நிறுவன தரப்பினரிடம் கலந்து பேசி மீட்சியுறும் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை முடியும் வரை அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்ததாக செய்தியாளர்களிடம் பேசிய பிரபாகரன் கூறினார்.

இதன் தொடர்பில் இன்னும் மூன்று நாட்களில் கலந்து பேசிய முடிவை சொல்வதாக மேம்பாட்டு நிறுவன தரப்பினர் கூறினர். இதனிடையே நேற்று உடைப்படுவதாக இருந்த ஜாலான் லங்காக் புக்கிட் தற்காலிகமாக காப்பாற்றப்பட்டுள்ளது.

மீட்சியுறும் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை அமலில் இருக்கு போது குடியிருப்பாளர்களை உடனடியாக வெளியேற சொல்வது முறையல்ல. காரணம் இங்கு வயதானவர்களும் இருக்கின்றனர். எனவே குடியிருப்பாளர்களின் நிலை அறிந்து மேம்பாட்டு நிறுவனம் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்று பிரபாகரன் கேட்டு கொண்டார்.

-சூரியகுமார் முருகன்
படங்கள்: ஆர்.பார்த்திபன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here