கணவரால் படுகொலை செய்யப்பட்ட பெண் பத்திரிக்கையாளர்

பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பிரபலமாகி வந்த பெண் பத்திரிக்கையாளரை அவரது கணவர் சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் அடிமைத்தனம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறைந்த தெற்காசிய நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. இங்கு அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்கள், ஆண்களை எதிர்க்கும் பெண்கள் அனைவரும் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்படுவது வழக்கம். இந்த பெண்களுக்கு எதிரான தாக்குதல், கவுரவக் கொலைகளை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றன. இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் பாகிஸ்தானில் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் அங்கு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று பிரபலமாகி வந்த பெண்பத்திரிக்கையாளரை அவரது கணவர் சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் அங்கு நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

பலூசிஸ்தான் மாகாணத்தின் கெச் மாவட்டத்தில் உள்ள டர்பட் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவருபவர் ஷாஹீனா ஷாஹீன். பத்திரிக்கையாளாரன இவர் அங்குள்ள பிடிவி என்ற செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் அவர் பலூசிஸ்தான் பல்கலைக்கழகத்தில் நுண்கலை மாணவியாகவும் உள்ளார். இதனிடையே தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்த அவரை பலூசிஸ்தானின் பழமைவாத பகுதியான டர்பட் பிரபலமாக்கியது. இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் ஷாஹீனாவை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளார்.

இந்த கொலையில் இதுவரை ஷாஹீனாவின் கணவர் உட்பட யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும், ஷாஹீனின் குடும்பம் சார்பில் அவரது கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பெண்ணுரிமை பாதுகாப்பு அமைப்புகள், இது போல பாகிஸ்தானில் பல பெண்கள் கணவர்கள், சகோதரர்கள் மற்றும் பிற உறவினர்கள் உட்பட நெருங்கிய உறவினர்களால் கொல்லப்பட்டுகின்றனர் என தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here