இலங்கையில் பசுக்களை வெட்டத் தடை செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
இலங்கையில் மதம் மற்றும் கலாச்சார விவகாரத் துறை அமைச்சர் புத்த சாசனா தலைமையிலான ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழு இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவது தடை செய்யப்படும் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். விரைவில் பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் ராஜபக்சவின் முடிவை ஆளும் கட்சியான இலங்கை மக்கள் கட்சி (எஸ்எல்பிபி) எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வரவேற்றனர். இதுதொடர்பாக ராஜபக்ச கூறும்போது, ‘பசுக்களை இறைச்சிக்காக கொல்வதைத் தடுக்க வேண்டும் என்று புத்த மத மறுமலர்ச்சி பிக் ஷுவும், தேசியத் தலைவருமான அனாகரிகா தர்மபாலா வலியுறுத்தி வந்தார். ஆனால், இதை சட்டமாக்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது எங்கள் அரசு இதற்கான சட்டத்தைக் கொண்டு வரவுள்ளது.
வேண்டுமானால் இறைச்சி சாப்பிடுவோருக்காக இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்’ என்றார்.