தேர்தலில் போட்டியிட்ட முதல் இந்திய பெண்மணி

(இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதன் ஒன்பதாவது அத்தியாயம் இது.)

அது 1930 ஆம் ஆண்டு. கமலாதேவி சட்டோபாத்யாய்க்கு அப்போது வயது 27. மகாத்மா காந்தி தண்டிக்கு யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்குவார் என்றும் அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடற்கரைப் பகுதிகளில் உப்பு தயாரிக்கப்படும் என்றும் கமலாதேவிக்குச் செய்தி எட்டியது.

மகளிர் ராட்டையில் நூல் நூற்பதிலும் கள்ளுக்கடை மறியல் செய்வதிலும் ஈடுபட வேண்டும் என்றும் உப்பு சத்தியாகிரகத்திலிருந்து மகளிர் விலகி இருக்கவேண்டும் என்றும் காந்தியடிகள் அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால் இந்த விஷயத்தில் கமலாதேவிக்கு உடன்பாடில்லை.

தனது சுயசரிதையான ‘இன்னர் ரிஸஸ் ஔட்டர் ஸ்பேஸஸ்’ (Inner Recesses Outer Spaces) புத்தகத்தில் அவர் இது பற்றி குறிப்பிட்டுள்ளார். உப்பு சத்தியாகிரகத்தில் பெண்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று தாம் உணர்ந்ததாகவும் இது குறித்து நேரடியாக காந்தியடிகளிடமே பேசுவது என்றும் தாம் முடிவு செய்ததாகவும் அவர் எழுதியுள்ளார்.

அந்த சமயத்தில், மகாத்மா காந்தி ரயில் பயணம் மேற்கொண்டிருப்பதை அறிந்து கமலாதேவி ரயில் நிலையம் சென்று ரயிலிலேயே காந்தியடிகளைச் சந்தித்தார். ரயிலில் மகாத்மா காந்தியுடன் அவர் நிகழ்த்திய சந்திப்பு சிறிது நேரமானாலும், அது வரலாற்றை மாற்றி எழுதவல்லதாக இருந்தது.

முதலில் மகாத்மா காந்தி அவரைத் தம் கருத்துக்குச் சம்மதிக்க வைக்க முயன்றார், ஆனால் கமலாதேவியின் வாதங்களைக் கேட்டபின், மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தில் பெண்கள் மற்றும் ஆண்களின் சம பங்களிப்பு தேவை என்று ஒப்புக் கொண்டார். இது மகாத்மா காந்தி எடுத்த ஒரு வரலாற்று முடிவு.

இந்த முடிவிற்குப் பிறகு, மகாத்மா காந்தி தண்டி சென்று உப்பு சத்தியாக்கிரகம் நடத்தியதுடன், பம்பாயில் இதனை வழிநடத்த ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தார். இந்த அணியில் கமலாதேவி மற்றும் அவந்திகாபாய் கோகலே ஆகியோர் இடம்பெற்றனர்.

பெண்கள்பங்களிப்பிற்கானமுக்கியமுயற்சி

நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பெண்களுக்காக உழைக்கும் அரசு சாரா அமைப்பின் நிறுவனருமான ருச்சிரா குப்தா, “இந்த நடவடிக்கை சுதந்தர இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தது.

பெண்கள் தோளோடு தோள் நின்று உப்பு வரியை நீக்கப் போராடியதை உலகமே வியந்து பார்த்தது. இதனால், காங்கிரஸ் கட்சியிலும் அரசியலிலும் சுதந்தரத்திற்குப் பிறகும் பெண்களின் பங்களிப்பு பெருமளவில் அதிகரித்தது” என்று கூறுகிறார்.

வரலாற்றின் பக்கங்களில் உப்பு சத்தியாகிரகத்தில் கமலாதேவி தொடர்பான பல நிகழ்வுகள் கொட்டிக்கிடக்கின்றன.

காவல் துறையினருடன் போராடி, கமலாதேவியும் அவரது சகாக்களும் உப்பு தயாரித்து அதனைப் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யத் தொடங்கினர். ஒரு நாள் அவர் பம்பாய் பங்குச் சந்தைக்குள் நுழைந்து அங்கேயும் உப்பை ஏலம் விட்டார்.

பங்குச் சந்தை அலுவலகத்தில் இருந்தவர்கள், ‘மகாத்மா காந்தி கி ஜெய்’ (மகாத்மா காந்தி வாழ்க) என்ற முழக்கங்களை உற்சாகத்துடன் எழுப்பினர். இந்த சம்பவத்தை சகுந்தலா நரசிம்மன் தனது ‘கமலாதேவி சட்டோபாத்யாய் – ‘தி ரொமாண்டிக் ரிபல்’ (Kamladevi Chattopadhyay – The Romantic Rebel) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர், “பங்குச் சந்தையில் உப்பு ஏலத்திற்குப் பிறகு கமலாதேவிக்கு மற்றொரு யோசனை வந்தது. அவர் உயர் நீதிமன்றத்தை நோக்கிச் சென்றார். உயர் நீதிமன்றத்தில் இருந்த நீதிபதியிடம், ‘ஃப்ரீடம் சால்ட்’ அதாவது சுதந்திர உப்பு வாங்க விரும்புகிறீர்களா என்று கமலாதேவி கேட்டார். இதற்கு அவர் என்ன பதிலுரைத்தார் என்பது தெரியவில்லை, ஆனால் கமலாதேவியின் துணிச்சல் பற்றிய புகழ் வெகுதூரம் பரவியது.” என்று எழுதுகிறார்.

கமலாதேவியின் இந்தத் துணிச்சலின் பின்னணியில் அவரது தாய்க்கும் பாட்டிக்கும் ஒரு பெரிய பங்கு உண்டு.

அவரது தந்தை அனந்ததையா தாரேஷ்வர் மாவட்ட ஆட்சியராக இருந்தார். அவர் ஒரு முற்போக்கான கருத்தியலாளரும் கூட. ஆனால், கமலாதேவி குழந்தையாக இருந்தபோதே அவர் காலமாகிவிட்டதால், குழந்தை வளர்ப்பின் பொறுப்பு தாயைச் சேர்ந்தது.

19 ஆம் நூற்றாண்டில் பெண் கல்வி முறை இல்லை என்றாலும், கமலாதேவியின் தாயார் கிர்ஜாபாய், வீட்டிலேயே பண்டிதர்கள் மூலம் தனது மகள் கல்வி கற்க வழி செய்தார்.

கணவரின் மரணம் மற்றும் சமூக அழுத்தம் காரணமாக, தாய் கிர்ஜாபாய் தனது மகள் கமலாதேவியை 11 வயதில் திருமணம் செய்து கொடுத்தார்.

ஆனால் சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, கமலாதேவியின் கணவர் உயிர் இழந்தார். அந்த நேரத்தில் மகளின் குழந்தைத் திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட அவரது தாயார், பிராமண சமூகத்தில் ஒரு விதவைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தன் மகளுக்கு விதிக்க மறுத்துவிட்டார்.

கமலாதேவியின் கூந்தல் மழிக்கப்படுவதையோ வெண்ணிற ஆடை உடுத்தப்படுவதையோ ஒரு மூலையில் முடங்கிக் கிடந்து பூஜை செய்வதையோ அவர் கட்டாயப்படுத்தவில்லை. கிர்ஜா பாய், சமூக அழுத்தத்துக்கு ஆட்படாமல், கமலாதேவியைப் பள்ளிக்குச் செல்ல அனுமதித்தது மட்டுமல்லாமல், சுதந்தரமாக முன்னேற வழி காட்டினார்.

கிர்ஜாபாய் பெண்ணியவாதிகளான பண்டித ராமாபாய் மற்றும் ராமாபாய் ரானடே ஆகியோரின் ஆதரவாளராக இருந்தார், மேலும், கமலாதேவிக்கு அன்னி பெசன்ட் அம்மையாரை, ஒரு முன்மாதிரியாக அறிமுகப்படுத்தினார்.

கமலாதேவியும் இத்தகைய எழுச்சியூட்டும் பெண்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டார். சென்னை ராணி மேரி கல்லூரியில் பயின்று வந்த சமயத்தில், சரோஜினி நாயுடு அவர்களின் சகோதரர் ஹரிந்திரநாத் சட்டோபாத்யாயைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹரிந்திரநாத், அக்காலத்தின் புகழ் பெற்ற கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.

கமலாதேவி தனது 20 வயதில் ஹரிந்திரநாத்தை மணந்தார். பல பழமைவாதிகள் இந்த விதவை மறுமணம் குறித்தும் கண்டனம் கூறினர். பின்னர், கமலாதேவி ஹரிந்திரநாத்தை விவாகரத்து செய்ய முடிவு செய்த போதும் பலர் முகம் சுளித்தனர்.

ஆனால் இதையெல்லாம் புறக்கணித்து கமலாதேவி எப்போதும் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகவே திகழ்ந்தார்.

பெண்கள் திரைப்படங்களில் நடிப்பது என்பது மிகவும் கீழ்த்தரமானதாகக் கருதப்பட்ட காலத்தில், கன்னட மொழியின் முதல் வசனமில்லா படமான ‘ம்ருச்சாகடிகா’-வில் நாயகியாகத் தோன்றினார் கமலாதேவி.

1943 ஆம் ஆண்டில் ஹிந்தி திரைப்படங்களான ‘தான்சேன்’, ‘ஷங்கர் பார்வதி’ ஆகிய படங்களிலும் 1945-ல் ‘தன்னா பகத்’ என்ற படத்திலும் அவர் முக்கிய வேடங்களில் நடித்தார்.

ஆனால் இதற்கெல்லாம் முன்பு, அவர் மகாத்மா காந்தியால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1920களின் முற்பகுதியில் இருந்தே, அரசியலில் அவரது ஈடுபாடு தெளிவாக இருந்தது.

மகாத்மா காந்தி 1923 இல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, ​​கமலா தேவி தனது கணவருடன் லண்டனில் இருந்தார். அவர் நாடு திரும்பி வர முடிவு செய்து காங்கிரஸ் சேவா தளத்தின் உறுப்பினரானார்.

1926 இல் ஒரு முக்கியமான நபரைச் சந்தித்தார். அயர்லாந்தில் பெண்ணியவாத தலைவியாக இருந்த மார்கரெட் கசன்ஸுடனான சந்திப்பு தான் அது. மார்கரெட் அகில இந்திய மகளிர் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, கமலாதேவியை முதலாவது பொதுச் செயலாளராக நியமித்தார்.

மார்கரெட் கசன்ஸின் ஊக்கத்துடன், கமலாதேவி விரைவில் மற்றொரு பெரிய அடியை எடுத்து வைத்தார். அது அவருக்கு இந்திய அரசியலில் ஒரு தனித்துவமான இடத்தை அளிக்கிறது.

மெட்ராஸ் மற்றும் பம்பாய் பிரசிடென்சிஸியில் முதன்முறையாகப் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. பெண்களின் இந்த உரிமையைப் பெறுவதில் மார்கரெட் கசன்ஸ்-ன் முன்முயற்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது, ஆனால் மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடப் பெண்களுக்கு உரிமை இல்லை.

1926 ஆம் ஆண்டில் அப்போதைய மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்குச் சற்று முன்னர் பெண்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். மார்கரெட் கஸன்ஸின் ஊக்கத்தின் பேரில் கமலாதேவி போட்டியிட்டார்.

எழுத்தாளர் ரீனா நந்தா தனது புத்தகமான ‘கமலாதேவி சட்டோபாத்யாய் – பயோகிராஃபி” என்ற சுயசரிதையில், “இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்ய மிகக் குறைவான நேரம் மட்டுமே இருந்தது. அப்போது, கமலாதேவியின் பெயர் வாக்காளராகக் கூடப் பதிவு செய்யப்படவில்லை. அவசரமாக தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கஸன்ஸ், பெண் ஆர்வலர்கள் குழுவை உருவாக்கி அனல் பறக்கும் பிரசாரம் மேற்கொண்டார். இதில், கமலாதேவியின் கணவர் ஹரிந்திரநாத்தின் நாடகங்கள் மற்றும் தேசபக்தி பாடல்களைப் பாடி பிரசாரம் செய்தார்” என்று பதிவு செய்துள்ளார்.

கடைசி சந்தர்ப்பத்தில், தேர்தல் களத்தில் நுழைந்த கமலாதேவி, மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார், ஆனால் “தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி” என்ற பெருமையைப் பெற்றார். கமலாதேவியின் இந்தத் திடீர் முன்னெடுப்பால், அரசியல் பதவிகளின் கதவு பெண்களுக்குத் திறக்கப்பட்டது.

இந்தத் தேர்தலுடன், கமலாதேவியின் அரசியல் பயணம் தொடங்கியது, அவரது குறிக்கோள், பதவிக்கானதாக ஒருபோதும் இருக்கவில்லை. மாறாக, மாற்றம் வேண்டியே அவரின் ஒவ்வொரு நகர்வும் இருந்தது.

அவர் 1927-28ல் அகில இந்திய காங்கிரஸ் குழுவில் உறுப்பினரானார். குழந்தை திருமணத் தடைச் சட்டம், திருமண தகுதிக்கான வயது சட்டம் மற்றும் சுதேச மாகாணங்களுக்கு இடையேயான மோதல் குறித்த காங்கிரஸ் கொள்கை ஆகியவற்றை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

சுதந்தரத்திற்குப் பிறகு, கமலாதேவி சட்டோபாத்யாய் எந்த அரசியல் பதவியையும் ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் கே.காமராஜ் அவரை ஆளுநராக்க விரும்பினார்.

இந்த திட்டத்தை அவர் ஜவாஹர்லால் நேருவின் முன்வைத்தபோது, ​​நீங்கள் கமலா தேவியிடம் கேளுங்கள், அவர் ஒப்புக்கொண்டால், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நேரு கூறினார். கமலாதேவி எந்த அரசாங்க பதவியிலும் அமர ஒருபோதும் தயாராக இருக்க மாட்டார் என்று காமராஜ் புரிந்து கொண்டார்.

இருப்பினும், சுதந்தரம் பெற்ற உடனேயே, அகதிகளின் மறுவாழ்வு மீது கமலாதேவி தனது கவனத்தைச் செலுத்தினார்.

அவர் கூட்டுறவு இயக்கம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் இந்தியக் கூட்டுறவு சங்கத்தை உருவாக்கினார்.

கமலாதேவி, மக்களின் பங்களிப்புடன், அகதிகளுக்காக ஒரு நகரத்தை உருவாக்கும் திட்டத்தைப் பிரதமர் ஜவாஹர்லால் நேருவிடம் முன்வைத்தார். அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு நிதி உதவியையும் எதிர்பார்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் இதற்கு ஜவஹர்லால் ஒப்புக்கொண்டார்.

கமலாதேவி சட்டோபாத்யாய், இந்திய கூட்டுறவு சங்கத்தின் உதவியுடன், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் வடகிழக்கு எல்லைப்புற மாகாணத்திலிருந்து வந்த அகதிகளை டெல்லிக்கு அருகில் குடியேற்றினார். அந்த இடம் தான் இன்று ஃபரிதாபாத் என்று அழைக்கப்படுகிறது.

1950 முதல், கமலாதேவி இந்திய நாட்டுப்புற மரபுகள் மற்றும் சாஸ்திரியக் கலைகளை புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் நேரத்தை அர்ப்பணித்தார். சுதந்தரத்திற்குப் பிறகு இந்திய கைவினைப்பொருள் அமைப்புகளை நிறுவுவதில் பெரிய பங்கு வகித்தார். இதற்காக, மத்திய குடிசை தொழில்கள் எம்போரியம் மற்றும் இந்திய கைவினைக் கவுன்சில் ஒன்றை உருவாக்கினார்.

கமலாதேவி இந்திய நாடக பாரம்பரியத்தையும் பிற கலை வடிவங்களையும் மேம்படுத்த இந்திய தேசிய அரங்கை நிறுவினார். பின்னர் இது இந்தியாவின் புகழ்பெற்ற தேசிய நாடக பள்ளியாக மாறியது.

கமலாதேவியின் முயற்சிகள் இந்திய இசை மற்றும் நடன மரபுகளை முன்னெடுக்கும் முன்னணி நிறுவனமான சங்கீத நாடக அகாடமியை நிறுவ வழிவகுத்தது.

கமலா தேவிக்கு இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. அவருக்கு ரமோன் மகசேசே விருதும் வழங்கப்பட்டுள்ளது.

அவர் அக்டோபர் 29, 1988 அன்று தனது 85ஆவது வயதில் உயிரிழந்தார். ஆனால் கமலாதேவி சட்டோபாத்யாய் செய்து காட்டிய சாதனைகளைப் புறக்கணிக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here