14,800 பேர் தீயை அணைக்க போராட்டம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், காட்டு தீ வேகமாக பரவி வரும் நிலையில், மழைக்கான வாய்ப்பு இருப்பதால், காட்டு தீயானது கட்டுக்குள் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கலிஃபோர்னியா மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது.

ஓரேகான், வாஷிங்டன் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் தனித்தனியாக காட்டு தீ ஏற்பட்டுள்ளது. 34 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்களில் உள்ள மரங்கள் தீயில் கருகி சாம்பலாகியதுடன் வனத்தை சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளில் உள்ள வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன. இந்நிலையில், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் 14 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் காட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, தீயை அணைக்க நீண்ட நாட்களாக சிக்கல் நீடித்து வந்த நிலையில், வறண்ட வானிலை மற்றும் காற்றின் வேகம் சற்று குறைந்துள்ளது. மேலும், காற்றில் ஈரப்பதம் நிலவுவதுடன், மழைக்கான வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், காட்டு தீ கட்டுக்குள் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் காட்டு தீயில் சிக்கி இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.  மேலும் 3 மாகாணங்களில் ஏராளமானோர் குறித்து தகவல் இல்லை என்று ஓரேகான் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here