முதலாளி ஒருவர் ஊழியரின் விரலை கடித்து துப்பிய சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
பல சமயங்களில் வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களிடம் முதலாளிகள் கடுமையாக நடந்துகொள்வர். அந்தவகையில், அதற்கு எடுத்துக்காட்டாக டெல்லியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. டெல்லியின் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் மோஹித் குமார். அவர், மயூர் விகார் பகுதியில் உள்ள ஹேமந்த் சித்தார்த் என்பவரது நிறுவனத்தில் பணி புரிந்துவருகிறார்.
பணி ரீதியாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெறும் நிலையில், கடந்த வியாழக்கிழமை பணி விவகாரம் தொடர்பாக இருவரும் கரோல் பாக் என்ற பகுதிக்கு ஹேமந்தின் காரில் சென்றுள்ளனர். ஆனால், அந்த பயணத்திற்கு மோஹித் வர மறுத்ததாகவும் மிகவும் வற்புறுத்தி ஹேமந்த் அழைத்துச்சென்றதாகவும் கூறப்படுகிறது.
கரோல் பாக் பகுதிக்கு சென்றவுடன் இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், கோவமடைந்த ஹேமந்த், தனது ஊழியரான மோஹித்தை மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், கன்னத்தில் அறையத்தொடங்கியுள்ளார். இதனால், தன்னை காத்துக்கொள்வதற்காக மோஹித் தன் கைகளை வைத்து முகத்தை மூடியுள்ளார்.
எனினும் ஆத்திரத்தில் செய்வதறியாது இருந்த ஹேமந்த், மோஹித்தின் விரலை கடித்து துப்பியுள்ளார். மேலும், அந்த இடத்தைவிட்டு தப்பிச்சென்றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோஹித்துக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், துண்டான விரலை மீண்டும் சேர்த்துள்ளனர். தற்போது மோஹித் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மோஹித் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஹேமந்த் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.