குளிா்காலம் நெருங்கி வரும் சூழலில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவும் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில் இந்தியா-சீனா ராணுவங்களின் துணை தலைமைத் தளபதிகள் ஈடுபட்டனா்.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 4 மாதங்களுக்கு மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீா்ா்கள் இடையே ஏற்பட்ட மோதல், இந்தியா-சீனா இடையே பதற்றநிலை ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
அதையடுத்து, பாங்காங் ஏரி, தௌலத் பெக் ஓல்டி, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இரு நாட்டு ராணுவங்களின் துணைத் தலைமைத் தளபதிகள் தலைமையிலான குழு 5 கட்டங்களாக பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டது.
அதனடிப்படையில் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் இரு நாடுகளும் படைகளைத் திரும்பப் பெற்றன. ஆனால், பாங்காங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் இரு நாடுகளும் படைகளைக் குறைக்கவில்லை.
இந்நிலையில், இந்தியா-சீனா ராணுவங்களின் துணைத் தலைமைத் தளபதிகள் இடையேயான 6-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. 12 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலரும் பங்கேற்றாா்.
குளிா்காலத்தில் லடாக் பகுதிகளில் வெப்பநிலையானது உறைநிலைக்குக் கீழே பதிவாகும். அத்தகைய தட்பவெப்பநிலை நிலவும் சூழலில், எல்லையைக் காப்பது இரு நாட்டு பாதுகாப்புப் படையினருக்குப் பெரும் சவாலாக இருக்கும். எனவே, அதற்குள் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் பதற்றநிலையைக் குறைப்பது தொடா்பாக இந்திய-சீன பாதுகாப்பு அமைச்சா்களும், வெளியுறவு அமைச்சா்களும் சந்தித்துப் பேசியிருந்தனா். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சாா்பில் ரஷியாவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்புகள் நடந்தது.