இந்தியாவுடன் வலுவான உறவு பிரசாரத்தில் ஜோ பிடன் உறுதி

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவுடன் இணைந்து, இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை மிகவும் வலுவானதாகவும், அமைதியானதாகவும் மாற்றுவோம். சீனாவின் அச்சுறுத்தல் இல்லாத அளவுக்கு அந்தப் பிராந்தியம் மாற்றப்படும்’ என, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஜோ பிடன் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,3ல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில், அதிபர், டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில், ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்கு, இரு கட்சிகளும் தீவிரமாக முயன்று வருகின்றன.அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே நிதி திரட்டும், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையிலான கூட்டத்தில், முன்னாள் துணை அதிபரான, ஜோ பிடன் பேசினார். இதில், 268 முக்கியப் பிரபலங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பிடன் பேசியதாவது:இந்தியாவும், அமெரிக்காவும் மிக சிறந்த நட்பு நாடாக உள்ளன. இந்தியாவுடனான என்னுடைய உறவு நீண்டகாலமானது.நான் எம்.பி.,யாக இருந்த போது, 15 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு உதவினேன். அதன்பின், துணை அதிபராகவும், இந்தியாவுடன் என்னுடைய தொடர்பு நீடித்தது.நான் அதிபரான பின், இந்த உறவு மேலும் வலுப்படும்.

சீனாவின் அச்சுறுத்தல் இல்லாத, மிகவும் வலுவான, அமைதியான இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவோம். செய்கையில் காட்டுவேன். இந்தியா மீதான என்னுடைய நம்பிக்கை, மதிப்பு தொடர்கிறது. அதைத்தான் இங்கு சுட்டிக் காட்டினேன்.இங்குள்ள, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கலாசார பிணைப்பை ஏற்படுத்திஉள்ளனர்.

அதைவிட, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்கை ஆற்றியுள்ளனர்.இந்தியர்களுக்கு உள்ள, எச் 1 பி விசா பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு காணப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்த நிலையில், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான, ஆப்ரிக்கா – இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிசை கடுமையாக விமர்சித்து, டொனால்டு டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.பென்னில்ஸ்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில், ‘கட்சியின் அதிபர் வேட்பாளர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். ‘ஆதரவு இல்லாததால் வெளியேறினார். ஆனால், எந்தத் தகுதியும் இல்லாத அவரை துணை அதிபர் வேட்பாளராக, ஜோ பிடன் அறிவித்துள்ளார். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது’ என, டிரம்ப் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here