அவதார் 2 முடிந்தது, ரிலீஸ் தேதி இதோ! – ஜேம்ஸ் கேமரூன்

2009 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்களை பிரமிக்க வைத்த படம் அவதார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்த இந்தப் படம் உலகம் முழுவதும் 2.78 பில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்து சாதனை படைத்தது.

அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை ஜேம்ஸ் கேமரூன் இயக்க திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ‘அவதார் 2’ படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாகவும், ‘அவதார் 3’படப்பிடிப்பு 95% முடிவடைந்துவிட்டதாகவும் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு ‘அவதார் 2’ ரிஸீல் தேதி ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பதாக டிஸ்னி அறிவித்த சில மாதங்களுக்குப் பிறகு வந்துள்ளது.

மேலும் அவதார் 2 – டிசம்பர் 16, 2022 ஆம் தேதியும், அவதார் 3 – டிசம்பர் 20, 2024 ஆம் தேதியும், அவதார் 4 – டிசம்பர் 18, 2026 ஆம் தேதி, அவதார் 5 – டிசம்பர் 22, 2028 ஆம் தேதியும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளன.

அவதார் குறித்து பேசியுள்ள ஜேம்ஸ் கேமரூன் “கரோனா வைரஸ் பாதிப்பால் கிட்டத்தட்ட 5 மாதங்களாக படப்பிடிப்பு பணிகள் நடக்கவில்லை, இதனால் ரிலீஸ் தேதி டிசம்பர் 2022 ஆம் ஆண்டுக்கு தள்ளிப்போயுள்ளது. அவதார் 2 படம் வெளியாகும் அன்றே அவதார் 3 படத்திற்கான வேலைகளை தொடங்கிவிடுவோம். இப்போது நியூசிலாந்தில் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். அவதார் – 2 முடிந்துவிட்டது, அவதார் -3 95% முடிந்துவிட்டது” என்று பேசியுள்ளார்.

அவதார் படம் வெளியாகி 13 வருடங்களுக்குப் பிறகு அவதார் – 2 வெளியாக உள்ளது.

அவதார் படப்பிடிப்பு குறித்து ஜேம்ஸ் கேமரூன் பேசியிருந்தாலும் படத்தின் கதைக்களம் குறித்து அவர் எந்த ஒரு சின்ன விஷயத்தையும் பேசவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here