மின்சாரம் தாக்கி 2 யானைகள் பலி

தேன்கனிக்கோட்டை: தளி அருகே கர்நாடக வனப்பகுதியில், ஏரியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது, மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில், 2 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வனப்பகுதியை ஒட்டி கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்கா வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, கரடி, புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியிலிருந்து ஆண்டுதோறும் 200க்கும் மேற்பட்ட யானைகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து தளி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 3ம்தேதி பன்னார்கட்டா தேசிய பூங்காவான சந்தேகோடள்ளி வனச்சரகம், உனுசனஹள்ளி வனப்பகுதியில் உள்ள சிக்கேனஹள்ளி ஏரியில், யானைகள் தண்ணீர் குடிக்க சென்றுள்ளன. இந்த ஏரியின் நடுவே உயர் அழுத்த மின்கம்பங்கள் உள்ளன. அதிலிருந்த மின்கம்பி அறுந்து, தண்ணீர் குடித்து கொண்டிருந்த யானைகள் மீது விழுந்தது. அதில் 12 முதல் 18 வயதுடைய 2 யானைகள், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து தகவலறிந்த சந்தேகோடள்ளி வனச்சரக அலுவலர் பிரசாந்த் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடம் சென்று இறந்த யானைகளின் உடல்களை தண்ணீரிலிருந்து மீட்டனர். தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து, நேற்று முன்தினம்(4ம்தேதி) குழி தோண்டி புதைத்தனர். இது தொடர்பாக, கர்நாடக வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தமிழக வனப்பகுதியான தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வனப்பகுதிகளில், மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. யானைகள் தண்ணீர் குடிக்க வரும் ஏரிகளிலும் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, வனவிலங்குகள் உயிரிழப்புகளை தவிர்க்க, வனப்பகுதிகளில் மின்பாதைகளுக்கு பதிலாக கேபிள் பதிக்க வேண்டும், நீர்நிலைகளில் மின்கம்பங்கள் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here