ஆக்ஸிஜன் தேவை அதிகரிப்பு

தமிழகத்தில், ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து அதிக விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இயற்கையாக கிடைக்கும் ஆக்ஸிஜனை சில நேரங்களில் நுரையீரல் திசுக்களால் முழுமையாக உட்கிரகிக்க முடியாத நிலைகளில், உபகரணங்களின் வாயிலாக செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. சாதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு, 95 சதவீதத்துக்கு மேல் இருக்க வேண்டும். இது, 90 சதவீதத்துக்கு கீழ் குறைந்தால் பிரச்னை ஏற்படுகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக நோயாளிகள் பலருக்கும் ஆக்ஸிஜன் தேவை உள்ளது. இதனால், தினமும் தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஆனால், கொரோனாவால், தொழிற்சாலைகளுக்கான ஆக்ஸிஜன் தேவை குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன் வழக்கமாக, கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள், 200 டன் ஆக்ஸிஜன் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இது, 600 டன்னாக அதிகரித்துள்ளது.

இதேபோல், தொழிற்சாலைகளில், இரும்பு பொருட்களை வெட்டவும், ஒட்ட வைக்கவும், ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. கொரோனாவால், தொழிற்சாலைகள் இயங்காத நிலையில், மாதந்தோறும், 400 டன் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தேவை 300 டன்னாக குறைந்துள்ளது.மருத்துவமனைகளின் தேவை அதிகரித்துள்ளதால் அதை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை தயாரிப்பாளர்கள் எடுத்து வருகின்றனர். தமிழகத்தில், சென்னை, ஈரோடு, திருச்சி ஆகிய பகுதிகளில் மட்டுமே திரவ நிலை ஆக்ஸிஜன் தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன.

இவர்கள் தமிழகத்தின் மொத்த தேவையையும் பூர்த்தி செய்கின்றனர். தற்போது தேவை அதிகரித்துள்ளதால் அண்டை மாநிலங்களில் இருந்து திரவ ஆக்ஸிஜன் பெறப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.’அதிக விலையால் நஷ்டம்’ அனைத்திந்திய தொழிற்சாலை வாயுக்கள் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் ஜெயகுமார் கூறியதாவது:ஈரோடு பெருந்துறையில் உள்ள ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனம் தினமும், 38 டன் ஆக்ஸிஜனை தயாரிக்கிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், பெருந்துறை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே வினியோகிக்கின்றனர். கொரோனாவுக்கு முன், ஏழு டன் திரவ ஆக்ஸிஜன் மட்டுமே இம்மருத்துவமனைகளால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மீதமுள்ள ஆக்ஸிஜன் சிறிய அளவிலான விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.தற்போது, தினமும் இம்மருத்துவமனைகள், 30 டன்னுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அந்தளவுக்கு தேவை அதிகரித்துள்ளது.இதனால் சிறிய அளவிலான ஆக்ஸிஜன் விற்பனையாளர்கள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்று அதிக விலை கொடுத்து திரவ ஆக்ஸிஜன் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதிக விலை கொடுத்து, வாங்கினாலும் இங்குள்ள மருத்துவமனைகளுக்கு குறைந்த விலைக்கே விற்பனை செய்ய முடிகிறது. இதனால், கடும் நஷ்டத்தை சந்திக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here