சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களாக கட்சி சாராத, மக்கள் செல்வாக்கு உள்ள 30 சதவீதம் பேரை களமிறக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு சாதகமான தொகுதிகளாக 150 தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 120 தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 80 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிக்கு 2 பேர்வேட்பாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். மற்ற தொகுதிகளில்கட்சியின் முக்கிய நிர்வாகிகள்போட்டியிட உள்ளனர். வேட்பாளர்களாக கண்டறியப்பட்டவர்கள் தற்போதிருந்தே தங்களுடைய தொகுதியில் மக்களை சந்திப்பது, தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த 6 மாதத்துக்குள் தொகுதிமுழுவதும் பிரபலமான நபராக மக்கள் மத்தியில், வேட்பாளர் அறியப்பட வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு 2 பேர் என கண்டறியப்பட்டவர்களில் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
இதுதவிர, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர், எந்த கட்சியையும் சாராமல் மக்கள் நலனுக்காக தொடர்ந்து இயங்கி வரும் சமூக ஆர்வலர் உள்ளிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியை சாராத மக்கள் செல்வாக்கு உள்ள நபர்களை வேட்பாளராக களமிறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின்நன்மதிப்பை பெற்ற வேட்பாளர்களை கண்டறிந்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிட வைக்க கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், நேர்மையான, மக்கள் மத்தியில் செல்வாக்குஉள்ள கட்சி சாராத 30 சதவீதம் வேட்பாளர்களை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயல்பாடுகளை பார்த்து ஈர்க்கப்பட்டு பலரும் வேட்பாளராக போட்டியிட சம்மதம்தெரிவித்துள்ளனர். தற்போது வேட்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ள 120 தொகுதிகளில் கட்சி சாராதவர்களின் முதல்கட்ட பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.