‘ராதே ஷ்யாம்’ படத்தின் இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராதே ஷ்யாம்’. ‘சாஹோ’ படத்தைத் தயாரித்த யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் ‘ராதே ஷ்யாம்’ வெளியாகவுள்ளது.
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இத்தாலி நாட்டில் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 80% காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. இதனிடையே, அக்டோபர் 23-ம் தேதி பிரபாஸ் தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார்.
அன்றைய தினம் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தெரியாமலே இருந்தது. முதன் முறையாக ‘ராதே ஷ்யாம்’ படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு மட்டும் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். இந்திக்கு யார் இசையமைப்பாளர் என்பதை ‘ராதே ஷ்யாம்’ படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.
‘ராதே ஷ்யாம்’ படத்தை முடித்துவிட்டு, ‘மஹாநடி’ இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படம் மற்றும் ‘ஆதிபுருஷ்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் பிரபாஸ்.