முதல்வருக்கு நடிகை கங்கனா பதிலடி

தன்னை துரோகி என்று விமர்சித்த மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, நடிகை கங்கனா ரணாவத், பதிலடி கொடுத்துள்ளார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பிரபல நடிகர் சுஷாந்த் சிங் மரண விவகாரத்தில், மும்பை போலீசாரை விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் அக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசினார். இதனால், மஹாராஷ்டிரா அரசுக்கும், கங்கனாவுக்கும் இடையே மோதல்கள் நிலவி வருகின்றன.இந்நிலையில், நேற்று முன்தினம் தசரா விழாவில் பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, கங்கனாவை மறைமுகமாக விமர்சித்து கூறியதாவது:சொந்த ஊரில் வாழ்வாதாரம் இல்லாததால், மும்பைக்கு வந்து தொழில் செய்தவர்கள், மும்பைக்கே துரோகம் இழைக்கின்றனர். மும்பையை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியதுடன் மட்டுமல்லாமல், இங்கு போதைப் பழக்கம் உடைய மக்கள் அதிகம் இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்குகின்றனர். அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை; எங்கள் வீட்டில், நாங்கள் துளசியை வளர்ப்போம்; கஞ்சாவை அல்ல. உங்கள் மாநிலத்தில் தான், கஞ்சா நிலங்கள் உள்ளன; மஹாராஷ்டிராவில் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு, பதிலடி கொடுத்து, நேற்று, ‘டுவிட்டரில்’ கங்கனா பதிவிட்டதாவது :உத்தவ் தாக்கரே, என்னை துரோகி என்கிறார். உங்கள் மகன் வயதில் இருக்கும் என்னிடம் இப்படி பேசும் உங்களை நினைத்தால் வெட்கக்கேடாக உள்ளது. நான் உங்களைப் போல, என் தந்தையின் அதிகாரம் மற்றும் செல்வங்களை வைத்து வளர்ந்தவள் அல்ல. இவ்வாறு, அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here