ஆதரவு அலை வீசுகிறது டொனால்டு டிரம்ப் உற்சாகம்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ”நாடு முழுதும் எனக்கு ஆதரவு அலை வீசுகிறது.”கடந்த தேர்தலை விட மிகப்பெரிய சாதனை வெற்றியைப் பெறுவேன்,” என, குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடும், அதிபர் டொனால்டு டிரம்ப் உற்சாகமாக பேசினார்.அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்த மாதம், 3ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சியின் சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர், ஜோ பிடன் கடும் போட்டியை அளித்து வருகிறார்.இதுவரை நடந்துள்ள கருத்துக் கணிப்புகளில், ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார். அதே நேரத்தில், டிரம்ப் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, மிச்சிகன், விஸ்கான்சின், நெப்ராஸ்கா மாகாணங்களில் நேற்று முன்தினம் மூன்று பிரசார பேரணிகளில் அவர் பேசினார். மழை மற்றும் கடும் குளிரிலும், அதிகளவு தொண்டர்கள் அவருக்காக காத்திருந்தனர்.இந்த பிரசார கூட்டங்களில், டிரம்ப் பேசியதாவது:அடுத்த ஏழு நாட்களில் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற உள்ளோம். கடந்த தேர்தலின் போது, எங்கிருந்து இவ்வளவு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து நமக்கு ஓட்டளித்தனர் என்று ஆச்சரியப்பட வைத்தனர்.

இந்த முறை, அதைவிட மிகப்பெரிய சாதனை வெற்றியைப் பெறுவோம்.ஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாக அமைந்துவிடும். இடதுசாரி பயங்கரவாதிகளின் ஆட்சி தான் இங்கு நடக்கும். அதிக வரி விதிப்பது தான் பிடனின் கொள்கை. ஊரடங்கு என்ற பெயரில், நாட்டை முடக்கி விடுவார்.அடுத்த ஆண்டில், நமக்கு தடுப்பூசி கிடைத்துவிடும்.

மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்க உள்ளோம்.ஜோ பிடனை தோற்கடிப்பதற்காக மக்கள் தயாராக உள்ளனர். நாடு முழுதும் எனக்கு மிகப்பெரிய ஆதரவு அலை வீசுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, டிரம்பின் மனைவி மெலனியா, பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின், பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். ‘டிரம்ப் கடுமையாக போராடக் கூடியவர்.

நாட்டு மக்களுக்காக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் உழைப்பவர்’ என, அவர் குறிப்பிட்டார். ‘பிரிவினை ஏற்படுத்திவிட்டார்’ஜார்ஜியாவில் நடந்த பிரசார கூட்டத்தில், ஜோ பிடன் பேசியதாவது:கொரோனா வைரஸ் பரவலால், கடந்த சில மாதங்களில் நாட்டில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை, 2.25 லட்சம் உயிர்களை இழந்துள்ளோம். பலர் வேலையை இழந்துள்ளனர்.

வியாபாரம் நடக்கவில்லை, தொழில்கள் இயங்கவில்லை. இவ்வாறு மக்கள் மனதில் சோகம், ஆத்திரம், வெறுப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் மனதில் மிகப்பெரிய வடுவை இது ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே இனவெறியை துாண்டிவிட்டு, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியுள்ளார் டிரம்ப். இவ்வாறு மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள ரணங்களுக்கு மருந்தாக இருக்க வேண்டியது, அதிபரின் பொறுப்பு, கடமை.

அதில், டிரம்ப் தோல்வி அடைந்துவிட்டார்.இவ்வாறு அவர் பேசினார்.சீக்கியர் ஆதரவுஅமெரிக்க வாழ் இந்தியர்களில், சீக்கியர்கள் அதிகம் உள்ளனர். குறிப்பாக, மிச்சிகன், விஸ்கான்சின், புளோரிடா, பென்சில்வேனியா போன்ற இழுபறி மாகாணங்களில், இவர்கள் அதிகம் உள்ளனர்.சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கூறியதாவது:சீக்கியர்களில் அதிகமானோர் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். டிரம்பின் கொள்கைகளால், சிறு தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும், இந்தியா – அமெரிக்கா உறவும், டிரம்பின் நடவடிக்கைகளில் வலுப்பட்டுள்ளது. அதனால், சீக்கியர்களின் ஆதரவு அவருக்கு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here