ஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த..

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் கோரெகுந்தா என்ற கிராமத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மசூத் தனது மனைவி நிஷா மற்றும் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அதே தொழிற்சாலையில் பீகாரை சேர்ந்த சஞ்சய்குமார் என்பவரும் வேலை செய்து வந்தார்.

இதற்கிடையே மசூத்தின் உறவினர் ரபிகா என்பவருக்கும், சஞ்சய்குமாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே ரபிகாவுக்கு ஒரு மகள் உள்ளார். அந்த மகளை அடைய நினைத்த சஞ்சய்குமார், ரபிகாவை தனது சொந்த ஊருக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். பின்னர் குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலந்துகொடுத்து மயங்கியதும் ஓடும் ரெயிலில் இருந்து ரபிகாவை கீழேதள்ளி கொலை செய்துள்ளார்.

பின்னர் ஒன்றும் தெரியாதது போல வாரங்கல் திரும்பிய சஞ்சய்குமாரிடம், ரபிகா எங்கே என்று நிஷா கேட்டுள்ளார். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசில் புகார் அளிக்க உள்ளதாக மிரட்டினார். இதனால் அவரையும் கொலை செய்ய சஞ்சய்குமார் திட்டமிட்டார். அதன்படி கடந்த மே மாதம் 20-ந்தேதி குடும்பத்தில் உள்ள மசூத், நிஷா மற்றும் குழந்தை உள்ளிட்ட 9 பேருக்கு உணவில் மயக்கமருந்து கலந்து சஞ்சய்குமார் கொடுத்தார்.

இதனை சாப்பிட்ட அனைவரும் மயங்கி விழுந்தனர். உடனே 9 பேரையும் சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி கொலை செய்தார். ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சஞ்சய்குமார் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை வாரங்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி கே.ஜெயகுமார், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார். கொலை நடந்த 5 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here