சில தொழில்கள் அல்லது சில முக்கிய பதவிகளுக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் அல்லது வெளிநாட்டினரின் தேவையை அமைச்சகம் முழுமையாக அங்கீகரித்ததாகவும், அத்தகைய பதவிகளை மலேசியர் அல்லாதவர்களால் நிரப்ப போதுமான நியாயங்கள் இருந்தால், அத்தகைய விண்ணப்பங்களை எந்த வகையிலும் நிராகரிக்காது என்றும் டத்தோ ஶ்ரீ சரவணன் கூறியிருப்பதை வரவேற்பதாக மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் (பிரிமாஸ்) வரவேற்பதாக தலைவர் முத்துசாமி திருமேனி கூறினார்.
சில பணிகளுக்கு மலேசியர்கள் வர விரும்புவதில்லை. அவர்கள் அப்பணிகளை கெளரவ குறைச்சலாக கருதுகின்றனர். அது போன்ற பணிகளுக்கு அந்நிய தொழிலாளர்களை அமர்த்தலாம் என்ற செய்தி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக அவர் கருத்துரைத்தார்.
அனைத்து காலகட்டங்களிலும் மலேசியர்களுக்கே பணிக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம். அதே வேளை மலேசியர்கள் பெற முடியாத பட்சத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தவே முதலாளிகளாகிய நாங்கள் விரும்புகிறோம் என்று முத்துசாமி கூறினார்.