ராமேசுவரம் கோவில் நகைகளில் எடை குறைவு கண்டுபிடிப்பு

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லக்கூடிய தலம் ஆகும்.

ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம் உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட 65 வகையான விலைமதிப்பு மிக்க ஆபரணங்கள் உள்ளன. இந்த ஆபரணங்கள் அனைத்தும் கோவிலின் 2-ம் பிரகாரத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா, ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் நவராத்திரி திருவிழா உள்ளிட்ட விழா நாட்களில் சுவாமி-அம்பாளுக்கு இந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும்.

இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு அனைத்து வகை ஆபரணங்களையும் சரிபார்த்து, நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் மறு மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. இதில் சாமிக்கு அணிவிக்கப்படும் அனைத்து வகையான ஆபரணங்களும் ஆய்வு செய்யப்பட்டன. திருவிழா காலங்களில் சாமி, அம்பாள் வலம் வரும் தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட வாகனங்கள், தேர்களின் எடையும் சரிபார்க்கப்பட்டன.

இந்த ஆய்வின் போது, கோவிலில் சாமிக்கு அணிவிக்கப்படும் பல நகைகளில், அதன் எடை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. நகைகளில் எடை குறைவு குறித்து கோவிலில் பணியாற்றும் குருக்கள், மணியம் மற்றும் ஓய்வு பெற்ற குருக்கள் உள்ளிட்ட 30 பேருக்கு கோவில் நிர்வாகத்தால் அபராத தொகையுடன் கூடிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. நோட்டீசில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.12 லட்சம் வரையிலும் அபராதம் செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளதாம். இதை பார்த்து கோவிலில் பணியாற்றுபவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here