ஜெனிவா: உலக சுகாதார அமைப்பு (WHO) தனது 73 வது உலக சுகாதார மன்றத்தின் ஆன்லைன் கலந்தாய்வு கூட்டத்தில் (WHA), அடுத்த பெரும் தொற்றுக்கு தயாராக வேண்டும் என்று உலகத் நாட்டு தலைவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பே இன்னமும் சரியாகவில்லை. இந்த சூழலில் கொரோனாவை போன்ற தொற்று நோய்கள் எதிர்காலத்தில் வந்தால் அதை சமாளிக்கும் வகையில் தயாராக இருக்குமாறு உலக நாடுகளை உலக சுகாதார மையம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாம் இப்போது அடுத்த தொற்றுநோய்க்கு தயாராக வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும், வலுவான சுகாதார அவசரகால உள்கட்டமைப்பு கொண்ட நாடுகளால் விரைவாக செயல்பட முடிந்துள்ளதை கடந்த சில மாதங்களில் பார்த்தோம்.
நினைவூட்டி உள்ளது
ஒவ்வொரு தேசமும் தனது சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் போதுமான கவனம் செலுத்தினால் மட்டுமே ஆரோக்கியமான உலகத்திற்கான சுகாதார அடித்தளம் சாத்தியமாகும். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின் அடித்தளமே ஆரோக்கியம் தான் என்பதை கொரோனா தொற்றுநோய் நமக்கு தெளிவான நினைவூட்டி உள்ளது.
அறிவியல் தீர்வுகள்
கொரோனா பரவல் உலகளாவிய நெருக்கடி என்றாலும், பல நாடுகளும் நகரங்களும் ஒரு விரிவான, ஆதார அடிப்படையிலான அணுகுமுறையுடன் பரவுவதை வெற்றிகரமாகத் தடுக்கின்றன அத்துடன் கட்டுப்படுத்தியுள்ளன . ‘அறிவியல், தீர்வுகள் மற்றும் ஒற்றுமை’ ஆகியவற்றால் மட்டுமே கொரோனாவை வெற்றிகரமாக கையாள முடியும்.
சிகிச்சை முறையில் முன்னேற்றம்
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போரில் தேவையான தடுப்பூசிகள், நோயறிதல்கள் மற்றும் சிகிச்சை முறையின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கும், அவை எல்லா நாடுகளுக்கும் சமத்துவத்தின் அடிப்படையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் குறிப்பிட்ட திட்டத்தின் பின்னால் உலகம் ஒன்று திரண்டுள்ளது.
ஆரோக்கியமான ஆண்டு
இந்த கொரோனா பிரச்சனை வரவிருக்கும் 10 ஆண்டுகளில் உலகளாவிய சுகாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவர்கள் எடுக்க வேண்டிய முடிவுகளை கோடிட்டுக் காட்டியதுடன், 2030ம் ஆண்டுக்குள் நோய்தடுப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் காட்டியுள்ளது. ஆரோக்கியமான ஆண்டாக 2020-2030ஐ மாற்ற கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், காசநோய், கண் பராமரிப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் காய்ச்சலுக்கு எதிரான தயார்நிலை ஆகியவை குறித்து உலக நாடுகளுடன் கலந்துரையாடப்பட்டது’ இவ்வாறு உலக சுகாதார மையம் கூறியுள்ளது.