கொரோனா தடுப்பூசிக்கு உலகமே இந்தியாவை…

ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

தற்போது, கொரோனா தடுப்பூசி உருவாக்குவதில்தான் உலகம் முழுவதும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. விரைவாக இயல்புநிலை திரும்ப இது அவசியம். தடுப்பூசி உருவாக்கும் சர்வதேச முயற்சிகளின் மையப்புள்ளியில் இந்தியா இருக்கிறது.

விலை குறைவான தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க இந்தியா உதவும் என்று ஐ.நா.விடம் பிரதமர் மோடி ஏற்கனவே உறுதி அளித்துள்ளார்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். பல நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவதை வைத்து பார்த்தால், உலகமே விலை குறைந்த, நம்பகமான கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஹைட்ராக்சிகுளோரோகுயின், பாராசிட்டமால் ஆகிய மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது. அதனால், அந்த மருந்துகளின் உற்பத்தியை தீவிரப்படுத்தி, 150 நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இவற்றில் பாதிக்கு மேற்பட்ட நாடுகளுக்கு சொந்த செலவில் கொடுத்துள்ளோம்.

கொரோனா நமக்கு பல பாடங்களை கற்றுத்தந்துள்ளது. பொருளாதார மீட்பு நடவடிக்கையில்தான் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். கடந்த செப்டம்பர், அக்டோபர் மாத பொருளாதார வளர்ச்சி புள்ளிவிவரங்கள் ஊக்கம் அளிப்பதாக உள்ளன. இதை பயன்படுத்தி, உற்பத்திக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இந்தியாவில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை தொடங்குவது அவசியம். ‘வந்தே பாரத்’ திட்டம் மூலம், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டினரை அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here