கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த கல்லூரிகள், 8 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளித்த அரசு, விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என அறிவித்திருக்கிறது.
கடந்த 2 ஆம் தேதி முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்குத் திட்டமிட்டப்படி கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் இறுதியாண்டு மாணவர்களுக்கும் கல்லூரிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
உடல் வெப்ப பரிசோதனை, சானிடைசர் என பல்வேறு கட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பல மாதங்களாக வீட்டிலேயே இருந்து விட்டு, தற்போது மீண்டும் கல்லூரிக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சென்னை புறநகர் மின்சார ரயிலில் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர். அடையாள அட்டையைக் காட்டியும் மாணவர்கள் புறநகர் ரயிலில் அனுமதிக்கப்படாதது, மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.