விமானத்தின் இறக்கையின் மேல் ஏறிய மனிதன்

வாஷிங்டன்-
அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மெக்ஹரன் அனித்துலக விமான நிலையத்தில் இருந்து ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகருக்கு நேற்று மதியம் 2 மணியளவில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் புறப்பட தயாரானது.
அந்த விமானத்தில் பயணிகள் அனைவரும் தங்கள் இருக்கையில் அமந்திருந்தனர்.
விமானம் புறப்பட தயாரானபோது பாதுகாப்பையும் மீறி விமான நிலையத்தின் வேலியைத் தாண்டி விமான ஓடு தளத்திற்குள் மர்மநபர் நுழைந்தார். 
அந்த நபர் விமான ஓடுதளத்திற்குள் வேகமாக ஓடி வருவதை கண்ட அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். 
ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் வருவதற்குள் அந்த நபர் போர்ட்லேண்ட் புறப்படுவதற்கு தயாராக இருந்த அலாஸ்கார் ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கை பகுதி மீது அத்துமீறி ஏறினார். இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 
புறப்படத் தயாராக இருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய அந்த நபர் இறக்கையின் ஒரு பகுதியில் மறுபகுதிக்குச் சாதாரணமாக நடந்து சென்றார். விமான இறக்கையின் முனைப்பகுதிக்கு சென்ற அந்த நபர் இறக்கை பிடித்து தொங்கியவாறு வேடிக்கை காட்டினார். இதை விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர்.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக விமானத்தின் அருகே சென்று அந்த நபரை சுற்றிவளைத்தனர். விமானத்தின் இறக்கையில் தொங்கியவாறு இருந்த அந்த நபர் நிலை தடுமாறி திடீரென கிழே விழுந்தார்.
அந்த நபரை சுற்றி இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக கைது செய்து அங்கிருந்து அழைத்துச்சென்றனர். மேலும், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் விமானத்தின் இறக்கை மீது ஏறிய நபர் மனநலம் குன்றியவர் என தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here