லண்டன்-
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை இங்கிலாந்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பைசர் நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது.
இதையடுத்து, இங்கிலாந்து முழுவதும் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
முதல்கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு, வயதானோருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 8- ஆம் தேதி தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்ட நிலையில் முதல் வாரத்தில் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற தகவலை இங்கிலாந்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டது.
அந்த தகவலின்படி இங்கிலாந்தில் டிசம்பர் 8-ஆம் தேதி முதல் டிசம்பர் 16 ஆம் நாள் வரை 7 நாட்களில் மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் முதல் டோஸ் தற்போது போடப்பட்டுள்ளவர்கள் தடுப்பூசியின் 2-ஆவது டோஸ் ஊசியை 21 நாட்களுக்கு பின்னர் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது