திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியான நாளை முதல் வரும் ஜனவரி 3-ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக சுவாமியை தரிசிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக 10 நாட்களுக்கு முன்னரே ரூ.300 தரிசன டிக்கெட்களை ஆன்லைன் மூலமாக வெளியிட்டது. நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டிக்கெட்கள் வீதம் 10 நாட்களுக்கு 2 லட்சம் தரிசன டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இதனிடையே, சாதாரண பொதுமக்கள் இலவச தரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்கலாம் என திருப்பதிக்கு கிளம்பி வந்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் கரோனா பரவலை தடுக்கும் விதமாக, இம்முறை நாளை முதல் ஜனவரி 3- ஆம் தேதி வரை, திருப்பதி பக்தர்களுக்கு மட்டுமே இலவச சர்வ தரிசன டோக்கன் வழக்கப்பட உள்ளது.
எனினும், இலவச தரிசனத்துக்கு அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தமிழகம், கர்நாடகா ஆந்திராவின் பிற மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் திருமலைக்கு வருகின்றனர்.
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகளை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
பின்னர் ஜவஹர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ரூ.300 சிறப்பு தரிசனம், கல்யாண உற்சவம், வாணி அறக்கட்டளை போன்றவற்றில் ஏதாவது ஒரு டிக்கெட் கொண்டுவரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்காக அலிபிரி வழியாக அனுமதிக்கப்படுவர்” என்றார்.
பக்தர்கள் தர்ணா
வைகுண்ட ஏகாதசி, துவாதசியன்று சுவாமியை சொர்க்க வாசல் வழியாக தரிசிப்பதற்கான டிக்கெட் இல்லாத பக்தர்கள் அலிபிரி அல்லது வாரி மெட்டு பகுதி வழியாக திருமலைக்கு செல்ல போலீஸார் நேற்று அனுமதிக்க வில்லை.
இதனால், பக்தர்கள் கருடன் சிலையின் கீழ் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.