274 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல அனுமதி

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரைக்கு 274 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் தீவில் உள்ள தனுஷ்கோடிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.

இதனால் தனுஷ்கோடி பகுதியில் உள்ள அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம், கோதண்டராமர் கோயில் ஆகிய பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா பரவும் தாக்கம் குறைந்ததை அடுத்து, கடந்த வாரம் மெரினா கடற்கரை, மாமல்லபுரம், குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனாலும், தனுஷ்கோடி பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் 274 நாட்களுக்குப் பிறகு தனுஷ்கோடி கடற்கரைக்குச் செல்ல நேற்றுமுதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளுக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.

இதில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்றனர். இது தவிர பலர் கார், வாடகை வாகனங்கள் மூலம் தனுஷ்கோடிக்கு வந்து சென்றனர்.

தனுஷ்கோடியில் உள்ள சேது தீர்த்தத்தில் பக்தர்கள் தங்களின் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here