பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்லாத இளையராஜா

சட்டப்போராட்டம் நடத்தி பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்ல அனுமதி பெற்ற இளையராஜா, மன வருத்தம் காரணமாக அங்கு செல்லவில்லை. அவர் சார்பில் வேறு சிலர் அவரது இசைக்கருவிகளை எடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

அன்னக்கிளி தொடங்கி 1000 படங்களுக்கு மேல் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் ராஜாவாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. சென்னை, சாலிகிராமம், பிரசாத் ஸ்டுடியோவில், ஒலிப்பதிவு கூடம் உள்ளது. அதை, 35 ஆண்டுகளாக, இசை அமைப்பாளர் இளையராஜா பயன்படுத்தி வந்தார். ஒலிப்பதிவு கூடத்தை, காலி செய்யும்படி, பிரசாத் நிர்வாகம், இளையராஜாவை கேட்டுக் கொண்டது. இதையடுத்து, தொடரப்பட்ட வழக்கு சமரச பேச்சுக்கு சென்றது. அதில், முடிவு ஏற்படாததால், சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும், ஒலிப்பதிவு கூடத்தில், ஒரு நாள் தியானம் செய்யவும், உடமைகளை எடுத்து செல்லவும் அனுமதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இளையராஜா வழக்கு தொடுத்தார். மேலும், 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் கோரியிருந்தார். இந்த வழக்கில் பலக்கட்ட சமரசம், பேச்சுவார்த்தைக்குப் பின் பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக இளையராஜா கூறினார். இதை ஏற்ற நீதிமன்றம், ஸ்டுடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு அனுமதி வழங்கியது. மேலும் இளையராஜா தியானம் மேற்கொள்ளவும், இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம், தனது சொந்த செலவில் எடுத்துச் சென்று ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று(டிச., 28) பிரசாத் ஸ்டுடியோவுக்கு இளையராஜா வருவதாக இருந்தது. முன்னதாக அவரது வக்கீல் பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகை தந்து ஸ்டூடியோவில் உள்ள பொருட்கள் குறித்த நிலவரத்தை இளையராஜாவிற்கு கூறினார். அதில் இளையராஜா பொக்கிஷமாக பாதுகாப்பாக வைத்திருந்த சில பொருட்கள் அவரின் அனுமதியின்றி அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அவரின் தனியறை கதவு உடைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டு மன வருத்தத்தில் உள்ள இளையராஜா தனது வருகையை ரத்து செய்துள்ளார். இளையராஜாவை சமாதானம் செய்ய பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here