வாஷிங்டன்-
உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் டபுள்யூ டபுள்யூ இ (WWE) மல்யுத்தமும் ஒன்று. இந்த விளையாட்டிற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த விளையாட்டில் உள்ள பிரபலமான வீரர்களில் லூக் ஹார்ப்பரும் ஒருவர். இவர் ’வயட் பெம்லி’ என்ற பெயருடைய குழுவுடன் இணைந்து மல்யுத்தத்தில் பங்கேற்றுவந்தார். பின்னர் அந்த குழுவில் இணையாமல் தனியாகவே போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
லூக் ஹார்ப்பரின் உண்மையான பெயர் ஜானதன் ஹுபர். 41 வயதான லூக் ஹார்ப்பர் மல்யுத்த விளையாட்டில் பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் 2019 ஆம் ஆண்டு டபுள்யூ டபுள்யூ இ (WWE) மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த லூக் ஹார்ப்பர் நேற்று உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மனைவி அமேண்டா உறுதிபடுத்தியுள்ளார்.
லூக் ஹார்ப்பரின் மறைவுக்கு டபுள்யூ டபுள்யூ இ மல்யுத்த வீரர்களும், ரசிகர்களும் இரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும், லூக் ஹார்ப்பரின் மறைவால் அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.