பழநியில் 9 மாதங்களுக்கு பிறகு ரோப்கார் சேவை தொடக்கம்

கொரோனா ஊரடங்கால் பழநியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலைக்கோயிலுக்குச் செல்லும் ரோப்கார், 9 மாதங்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் இயங்கத் தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலுக்குச் செல்ல படிப்பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்), ரோப்கார் ஆகியவை இயக்கப்படுகின்றன. ஆனால், பக்தர்கள் ரோப்கார் மூலம் விரைவில் மலைக்கோயில் சென்று வரவே விரும்புகின்றனர்.

கடந்த மார்ச் இறுதியில் கொரோனா ஊரடங்கால் ரோப்கார் இயக்கம் நிறுத்தப்பட்டது. பின்னர் தளர்வுகள் அறிவித்தும் மின்இழுவை ரயில் மட்டுமே மலைக்கோயிலுக்கு இயக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு நேற்று முதல் ரோப்கார் இயக்கப்பட்டது. முன்னதாக சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

ஆன்லைனில் மட்டுமே பதிவு

ரோப்காரில் பயணம் செய்ய வழக்கம்போல் பயணச்சீட்டு வழங்கப்பட மாட்டாது. ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்து வரவேண்டும்.

இதற்கு முன் பக்தர்கள் தங்கள் விருப்பம்போல ஒரு வழிப்பயணத்துக்கான பயணச்சீட்டு எடுத்து வந்த நிலையில், தற்போது இரு வழிப் பயணக் கட்டணமாகச் சேர்த்தே ரூ.100 வசூலிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 1500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ரோப்கார் இயக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here