பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புங்கள் வீடுவீடாக சென்று பரப்புரை

கவின்மலர்

பாகான் செராய்,ஜன.04-

புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் பலரும் பலவகைகளில்  தமிழ்ப்பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பாகான் செராய் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர். சங்கத்தினரும் முன்னாள் மாணவர் சங்கத்தினரும் மாற்று வழியைக் கையாண்டுவுள்ளனர்

பள்ளியின் தலைமையாசிரியர் இராமன் த/ பெ எம்.கிருஷ்ணன் புறப்பாட பொறுப்பாசிரியர் பரிமளம் த/ பெ பலராமன் ஆகியோர் உடன் வர வீடுவீடாக  சென்று பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் சேர்க்கும் பரப்புரை நடவடிக்கையில் தாங்கள் ஈடுபட்டதாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மோகனராஜ் தபெ சுப்பிரமணியம்,,முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் துரைராஜ் த/பெ தண்டாயுதபாணி ஆகியோர் தெரிவித்தனர்.

ஒவ்வொரு பெற்றோரிடமும் தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப வேண்டியதன் அவசியத்தையும்.பிறமொழிப் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்ப எண்ணும. பெற்றோர்களின் எண்ணத்தையும் கேட்டறிந்து தேவையான விளக்கங்களையும் தந்ததன் வழி பெரும்பாலான பெற்றோர் தங்களின் நிலை உணர்ந்து பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கே அனுப்ப அனுமதி தந்துள்ளதாக மோகனராஜ் தெரிவித்தார்.வீடுவீடாக சென்று பரப்புரையில் ஈடுபட்டதுடன் தனியார் பாலர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோரைச் சந்தித்து அவர்களின் ஒன்றாம் ஆண்டு பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டோம்.

 பிறமொழிப் பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் அல்லது அனுப்ப நினைக்கும் பெரும்பாலான பெற்றோர் பிறமொழிப் பள்ளிகளுடன் தமிழ்ப்பள்ளிகளை ஒப்பிட்டுப் பார்த்து சிறப்பு கருதி அனுப்புவதில்லை என்பதை அவர்களிடம்  பேசும்போது உணர முடிகிறது.தமிழ்ப்பள்ளிகள் பற்றி்ய தவறான புரிதலும் அறியாமையே பெரும்பாலும் காரணமாகவுள்ளது.பிற மொழிப்பள்ளிகளில் ஒன்றாம். இரண்டாம் ஆண்டுகளில் பயிலும் மாணவர்களிடம் அவர்கள் படிக்கும் பள்ளிகளில் எவ்வாறு பாடங்களைப் படிக்கிறீர்கள் என்று கேட்கும் போது பிற மொழிகள் தெரியாத காரணத்தால் தாங்கள் வகுப்பிலும் பள்ளியிலும் தனித்திருந்து அமைதி காப்பதாகவும் பலர் எதுவும் படிக்காமல் அமைதியாக அமர்ந்திருந்துவிட்டு வீடு  திரும்புவதாகவும் தெரிவித்தனர்.

அது மட்டுமல்லாமல் மொழி தெரியாத பிள்ளைகள் தங்கள் பள்ளியில் படிப்பதால் பள்ளியின் ஆண்டு தேர்வுகளின் அடைவு நிலைகள் பாதிப்பதாக பிறமொழிப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் குறைப்பட்டுக் கொள்வதுடன்  பிற மொழி தெரியா இந்திய  மாணவர்கள் மற்றமொழி பள்ளிகளுக்குச் செல்வதைவிட தமிழ்ப்பள்ளிகளில் பயில்வதே சிறப்பு என்றும் அதன் வழி அடிப்படைக் கல்வியையாகிலும் நிறைவாக கற்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கின்றனர. என்பதை நமது பெற்றோர் கருத்தில் கொள்வது அவசியமாகும். தங்களின் இந்த பரப்புரை முயற்சியின் பயனாக குறைந்தது ஐந்து மாணவர்களையாகிலும் 2021 கல்வியாண்டில் புதிதாக கவர இயலும் என்று சு.மோகனராஜ் த.துரைராஜ் இருவரும் நம்பிக்கைத் தெரிவித்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here