லண்டன்-
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும் உருமாறிய கொரோனா பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. தற்போது கொரோனா வைரசுக்கு எதிராக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பல நாடுகளில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராகவும், தடுப்பூசிகள் பலன் அளிக்கும் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்காமல் போகலாம் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
“தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரசில் உள்ள புரதத்தில் பல பிறழ்வுகளை கொண்டுள்ளது.
இது அதிக தாக்கத்துடன் நோயாளிகளின் உடல்களில் வைரஸ் துகள்களை செறிவூட்டுகின்றன. இதனால் அதிகளவில் பரவுவதற்கு பங்களிக்க கூடும்” என்றனர்.
இங்கிலாந்து அரசின் தடுப்பூசி பணிக்குழு ஆலோசகர் பெல் கூறும் போது, “இங்கிலாந்தில் பரவும் புதிய மாறுபாடு வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யும் என்று நினைக்கிறேன். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் உருமாறிய வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது” என்றார்.